12,500 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மார்ச் 31, 2020

இலங்கை கடற்படையினர் நாட்டின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 463 கடல் மைல் (835 கி.மீ) தொலைவில் பெருமளவு போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு கப்பல் ஒன்றினை கைப்பற்றியுள்ளனர். ஆழ்கடல் பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையின் சயுர கப்பலினால் இக்கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.

எந்தவொரு நாட்டினதும் கொடி ஏற்றப்படாத நிலையில் கடலில் சஞ்சரித்த சந்தேகத்திற்கிடமான கப்பல், கடந்த 28ஆம் திகதி காலை வேளையில் அடையாளம் காணப்பட்டது. குறித்த கடல் பிரதேசத்திற்கு விரைந்த இலங்கை கடற்படை கப்பல், சந்தேகத்திற்கிடமான கப்பலை தடுத்து நிறுத்தியதுடன், 500 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் ரக போதை பொருள் மற்றும் 500 கிலோ கொக்கெயின் ஆகியன குறித்த கப்பலில் கொண்டு செல்லப்படுவதை கண்டுபிடித்தது.

மேலும் இக் கப்பலில் 200 பாக்கெட் பாபுல் போதைப் பொருள் மற்றும் 100 கிராம் அடையாளம் தெரியாத மாத்திரைகள் ஆகியனவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போதைப் பொருட்களின் சந்தைப் பெறுமதி இன்னும் சரியாக மதிப்பிடப்படவில்லை, எனினும் இவை ரூ. 12,500 மில்லியனுக்கும் அதிக பெறுமதியை கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள, குறித்த கப்பல் நாளை (ஏப்ரல்,01) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வரும்போது இடை மறிக்கப்பட்ட மூன்றாவது வெளிநாட்டு கப்பல் இதுவாகும். இதற்கு முன்னர், பெப்ரவரி 22 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு போதைப்பொருட்களை கொண்டுவந்த இரண்டு வெளிநாட்டு கப்பல்களையும் தடுத்து, அந்த வெளிநாட்டுக் கப்பல்களில் இருந்து போதைப்பொருட்களை மாற்றும் இலங்கை மீன்பிடிக் கப்பலையும் கைப்பற்றியது. இதன்போது 16 வெளிநாட்டினர் மற்றும் ஐந்து உள்ளூர்வாசிகளுடன் கடலில் போதைப்பொருட்களை மாற்றுவதில் ஈடுபட்ட மேலும் 6 உள்ளூர்வாசிகள் இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச கடலில் போதைப்பொருட்களைக் கொண்டு செல்லப்படுவதை அவதானிக்கும் வகையில் சர்வதேச கடல் எல்லையை ஒட்டி, வழமையான ரோந்து பணிகளில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், போதைப்பொருட்களை கொண்டு செல்லும் கப்பல்களைக் கண்டறிய செயற்கைகோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச போதைப்பொருள் விநியோகச் சங்கிலியில் தொடர்புகளைப் பேணிவரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.