வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தினால் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரம் அன்பளிப்பு

ஏப்ரல் 03, 2020

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தினால் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கான
ரூ. நான்கு மில்லியன் பெருமதியான காசோலையை வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் / தலைமை நிர்வாக அதிகாரி கனி சுப்ரமணியம், பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவிடம் கையளித்தார். காசோலையை கையளிக்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் பரவும் இவ்வேளையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இம்முக்கிய இயந்திரத்தை வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இந்நிறுவனம் மேற்கொண்ட முயற்சியை பாதுகாப்புச் செயலாளர் பாராட்டினார்.

"கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை நாட்டில் காணப்படும் சிறந்த வைத்தியசாலைகளில் ஒன்றாகும். இப்போது இவ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் சமூக ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படுவதில்லை. இவ் வைத்தியசாலை, அனைவருக்காகவும் எப்போதும் திறந்திருக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட வரையறுக்கப்பட்ட அலையன்ஸ் காப்புறுதி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம், தனியார் துறையினரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகாரிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கி அவர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சுகாதார சேவையை உறுதிப்படுத்த படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகளின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். இந்நிலையில் நோயினைத் துல்லியமாக அறியும் கருவிகளை அவர்கள் தம்வசம் வைத்திருப்பது அவசியம் என நாம் உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்த அவர், நாட்டின் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு உறுதியளிக்கும் உலகளாவிய காப்பீட்டு வழங்குநர் என்ற வகையில்,
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதிக்கும் இயந்திரத்தை வழங்குவதில் இந் நிறுவனம் பெருமையடைவதாகவும் தெரிவித்தார்.