இராணுவ குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி

ஜனவரி 15, 2019

இராணுவத்தில் சேவையாற்றும் படை வீரர்களின் 701 பிள்ளைகளுக்கு புலமைபரிசில்கள், பதக்கங்கள், மடிக்கணனி உள்ளிட்ட கல்வி உதவியினை இலங்கை இராணுவம் வழங்கியது. அண்மையில் (ஜனவரி, 11) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 14.2 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது, சேவையில் உள்ள படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவியினை வழங்கும் நோக்கில் இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு வருடாந்த நலன்புரி திட்டமாகும் என இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களிடமிருந்து, இலங்கை இராணுவ தொண்டர் படையணியனியில் சேவையிலுள்ள அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் பாடசாலை செல்லும் சிறுவர்கள் இக்கல்வி உதவியினை பெற்றுக்கொண்டனர்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, (க பொ த) சாதாரண தரப்பரீட்சை ஆகிய பொதுப்பரீட்சைகளில் சிறந்து விளங்கிய மற்றும் (க பொ த) உயர் தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய மாணவர்களே இக்கல்வி உதவியினை பெறுவதற்கான பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இதனடிப்படையில், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 248 மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 15,000.00 ரூபா மற்றும் ஒரு பாடசாலை பையும் பெற்றுக்கொண்ட அதேவேளை, (க பொ த) சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 25,000.00 ரூபா, 20,000.00 ரூபா மற்றும் 15,000.00 ரூபா வினையும், பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதியான 35 மாணவர்கள் ஒவ்வொருவரும் 50,000.00 ரூபா மற்றும் ஒரு தங்கப்பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், பாதுகாப்பு சேவைகள் கட்டளையக மற்றும் அதிகாரிகள் கல்லூரியில் psc இளமாணி கற்கையினை மேற்கொள்ளும் தெரிவு செய்யப்பட 10 அதிகாரிகளுக்கு புதிய மடிக்கணனிகள் வழங்கிவைகப்பட்டன.

இந்நிகழ்வின்போது, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி, திருமதி சந்திரிக்கா சேனநாயக்க அவர்களால் “செனஹச”. கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையத்திற்கு விஷேட தேவையுடைய குழந்தைகளின் நலன் கருதி கேட்டல் பரிசோதனை மெஷின், கண் பரிசோதனை இயந்திரம் மற்றும் பிசியோதெரபி உபகரணங்கள் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில், இராணுவ பிரதம அதிகாரி, கமடான்ட், இலங்கை இராணுவ தொண்டர் படை உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அனுசரணை வழங்கிய நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.