கொரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும் மருந்துகளை தயாரிக்குமாறு ஆயுர்வேத மருத்துவர்களிடம் அரசு கோரிக்கை
ஏப்ரல் 06, 2020கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் இலங்கையின் 60ற்கு மேற்பட்ட முன்னணி சுதேச மருத்துவ துறையினருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்துவதற்காக, பாரம்பரிய மருந்துகளை, பல நூறு ஆண்டுகளாக இலங்கையில் நடைமுறையிலுள்ள 'ஆயுர்வேத' மற்றும் 'சித்த' வைத்திய முறைகள் மூலம் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், கொடூர தொற்றுநோய் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், சுதேச நடைமுறைகளில் காணப்படும் முன்னெச்சரிக்கை, குணப்படுத்தல் மற்றும் குணப்படுத்தலின் பின்னரான நடைமுறைகள் முதலியவற்றில் சுதேச மருத்துவ நடைமுறைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளினால் விளக்கக்காட்சி ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.
முன்னணி சுதேச வைத்திய துறையினர், இந்த கொடிய தொற்று நோய்க்கு, நிரந்தர மருத்துவத் தீர்வை கண்டுபிடிப்பதற்காக ஒன்றிணைந்ததுடன்
அத்தகைய நடைமுறைகளை துல்லியமாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் சுட்டிக்காட்டினர்.
குறித்த சுதேச வைத்திய துறையினர், சுகாதார அமைச்சு மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நிலைய தலைமையகத்தினால் விடுக்கப்பட்ட அழைப்புகளை ஏற்று இந்நிலையத்திற்கு வருகை தந்தனர்.
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஆயுர்வேத மருத்துவ கவுன்சில் அதிகாரிகள், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலைய அதிகாரிகள் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருமான ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க ஆகியோர் இணைந்து குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்த கலந்துரையாடல் சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது
சுதேச மருத்துவ துறையினரின் உதவியைப் பெறுவதன் நோக்கம் தொடர்பாக விளக்கமளித்த ஜெனரல் ரத்னாயக்க, நாட்டில் எமது தலைமுறையினரால் புறந்தள்ளப்பட்ட மூதாதையர்களின் மூலிகை மற்றும் சுதேச மருத்துவ நிபுணத்துவத்தின் ஆழத்தினை தேடி அறிவதும், அவர்களினால் தயாரிக்கப்பட்ட மூலிகை கலவைகள், கஷாயங்கள், ஏனைய மருத்துவ கலவைகள் என்பன மக்களை குணப்படுத்தியது எவ்வாறு என அறிந்து கொள்வதும் கொரோனா வைரஸ் பரவலடையும் இவ்வகையான அவசர நிலைகளில் முக்கியமான ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் வன்னியாராச்சி மற்றும் இராணுவத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல். சில்வா ஆகியோர் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சீனா எவ்வாறு தீர்வினை கண்டுபிடித்தோ அதேபோன்று அதற்கான தீர்வாக ஆயுர்வேத முறைப்படி இதற்கான மருந்தினை விரைவாக கண்டுபிடிக்குமாறு சுதேச வைத்திய துறையினரிடம் வலியுறுத்தினர்.
அவ்வாறான மருந்துகள் கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்துவதில் வெற்றியளிக்குமாயின்
அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதில் சுகாதார அமைச்சுடன் இணைந்து இலங்கை இராணுவத்தினரும் அதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என இராணுவத் தளபதி உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் முன்னணி ஆயுர்வேத மருத்துவர் நிபுணரும் ஆயுர்வேத ஆணையாளருமான வண. தம்ம தம்மிஸார தேரர், சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சின் செயலாளர் சத்துர குமாரதுங்க, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விஜித செனவிரத்ன, சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் எச் டப் எம் புஷ்பலதா மெணிகே, தேசிய சபையின் மாகாண ஆயுள்வேத ஆணையாளர் டொக்டர் டி வீரரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜெயசிங்க, மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.