ஜனாதிபதி தலைமையில் 'சத்விரு அபிமன்' தேசிய வைபவம்

ஜூலை 19, 2019

போர் வீரர்களின் குடும்பங்களுக்கு 700 மில்லியன் ரூபா பெறுமதிக்கும் அதிகமான வீடமைப்பு, காணி மற்றும் கல்வி புலமைப்பரிசில்கள் உதவிகள்

தாய் நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காக தமது உயிர்களையும் அவயவங்களையும் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு இத்தேசம் கடமைப்பட்டுள்ளது. தேசத்தில் சமாதானம் உதயமானதன் பின்னர், முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியன நல்லிணக்கம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் பேரில், முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. போர் வீரர்களது குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்டங்கள், காணிகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல் என்பன அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நலன்புரி முயற்சிகளில் ஒன்றாகும்.

இதற்கேற்ப, போர் வீரர்களது குடும்பங்களுக்கு 700 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதிக்க வீடமைப்பு திட்டம், காணி மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் மாபெரும் நலன்புரி செயற்றிட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் எதிர்வரும் திங்கள்கிழமை (ஜுலை,22) மாலை சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

வீடமைப்பு திட்டம், காணி வழங்குதல் மற்றும் கல்வி உதவித்தொகை என்பன உயிரிழந்த படை வீரர்களின் குடும்பங்கள், அங்கவீனமுற்ற படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மற்றும் புதிய வீடுகளை நிர்மாணித்தல் ஆகியவற்றுக்கான நிதியுதவி "அபி வெனுவெண் அபி" மற்றும் தேசிய பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படுகின்றது.

இதற்கேற்ப, 2010 முதல் இன்றுவரை சுமார் 2917 புதிய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 4487 பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் 2014 முதல் நிறைவடைந்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ் நிர்மாணித்து முடிக்கப்பட்ட மொத்த வீடுகள் 7404 ஆகும்.

திங்களன்று இடம்பெறவுள்ள தேசிய வைபவத்தின்போது சுமார் 1504 பயனாளிகள் வீடுகள், காணி மற்றும் கல்வி உதவித்தொகை ஆகிவற்றை பெற்றுக்கொள்ளவுள்ளனர். இதன்போது ரூபா. 2.5 பெறுமதி மற்றும் இராணுவ ஆளணியினரின் உடல் உழைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 25 புதிய வீடுகள் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளதுடன் 925 பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான உதவித்தொகையும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.

மேலும், எலஹெர, கொலொன்ன, ஆனாமடுவ, முண்தலம மற்றும் பதவியபிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அரசு காணிகள் 246 போர்வீரர்களுக்கு தமது வீடமைப்பு தேவைகளுக்காக வழங்கப்படவுள்ளன. அத்துடன் விரு சிசு பிரதீபா திட்டத்தின் கீழ் போர்வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 308 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளன.

25 புதிய வீடுகள் "அபி வெனுவெண் அபி" திட்டத்தின் கீழ் ரூ .36.6 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த செலவில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் மற்றும் பிற செலவுகள் ஊள்ளடக்கப்படவில்லை.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களின் தலைமையில் இன்றையதினம் (ஜுலை, 19 )பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) , முப்படைகளின் தளபதிகள், சிரேஷ்ட பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.