பொலிஸ் நிலையங்களில் தேவையற்ற வரிசைகளை குறைப்பதற்காக ஊரடங்கு விதத்தில் புதிய சுற்றறிக்கை வெளியீடு
ஏப்ரல் 07, 2020* ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக 4 முறைகளைக் கொண்ட புதிய நடைமுறை அமுல்
* தங்கள் சேவை அடையாள அட்டையை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பொலிஸ் தலைமை அலுவலகம், மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம், பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகியவற்றின் ஊடாக 4 முறைகளைக் கொண்ட புதிய நடைமுறையின் கீழ் ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் நாடு முழுவதும் பொலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்
அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் அத்தியாவசிய மற்றும் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அவ்வப்போது தளர்த்தப்படுகின்றது. எனினும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விநியோக நிறுவனங்கள் தவிர்ந்த மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகளாவனவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தருகின்றனர். எனவே இதனை தவிர்க்கும் வகையில் குறித்த சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் கீழ் குறிப்பிடப்படும் 4 முறைமைகளின் கீழ் வழங்கப்படவுள்ளன. அவை:
- கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் 50 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் பொலிஸ் தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும்.
- கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் கீழ் வரும் 50 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கொண்ட நிறுவனங்களுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.
- ஏனைய மாகாணங்களில் உள்ள 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.
- 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர் மற்றும் 50க்கு குறைவான ஊழியர் எண்ணிக்கையை கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் அந்தந்த பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் வழங்கப்படும்.
- பொலிஸ் அதிகாரப் பிரதேசத்தில் உள்ள 10க்கும் குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அனுமதி அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், அதிகார சபைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தமது சேவை அடையாள அட்டையினை ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும்.
எனினும் தொழில் நிமித்தமின்றி தமது சேவை அடையாள அட்டையினை துஷ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் புதிய முறைமை உள்ளிட்ட மேலதிக தகவல்களை www.police.lk என்ற இணையத்தளத்திலும் அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.