கைவிடப்பட்ட வீஒஏ கட்டிடத்தை புதியதொரு தனிமைப்படுத்தும் வைத்தியசாலையாக இராணுவத்தினர் மாற்றியுள்ளனர்

ஏப்ரல் 08, 2020

- 40 கட்டில்களுடனான  படுக்கை வசதிகளைக்கொண்டதும்,  மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பபு கருதியும் தன்னியக்க பைலட் வாகனங்கள் மற்றும் ரோபோ தொழிநுட்பம் கொண்ட தனிமைப்படுத்தும் வைத்தியசாலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பகுதியிலுள்ள இரனைவில பிரதேசத்தில் 40 நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை வழங்கும் வகையிலான இத் தனிமைப்படுத்தும் வைத்திய சாலையினை இலங்கை இராணுவத்தினர்  நேற்று (ஏப்ரல் 7) திறந்து வைத்துள்ளனர்.

கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இவ் வொய்ஸ் ஒப் அமெரிக்கா கட்டிட தொகுதியினை தனிமைப்படுத்தும் வசதிகளுடன் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் மிக விரைவாக இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலப்பகுதிக்குள் புதுப்பிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த திட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, முப்படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜயசிங்க ஆகியோர் விஜயம் மேற்கொண்டு வழங்கப்பட்ட ஆலோசனைகேற்ப   ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

COVID-19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் தேசிய திறனை மேலும் அதிகரிப்பதற்கும் அதனை விரிவு படுத்துவதற்கும் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் வன்னியராச்சி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ரோபோ தொழில்நுட்ப சிகிச்சை வசதிகளை பயன்படுத்துவதன் மூலம் 14 வைத்தியர்கள் உள்ளிட்ட 34 மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைத்தியசாலையிலுள்ள நோயாளிகளுக்கு ரோபோக்களின் உதவியுடன் உணவு மற்றும் ஏனைய மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில்  வரையறுக்கப்பட்ட ஹேமாஸ் தனியார் மற்றும் அட்லஸ் ஆகிய நிறுவனங்கள் குறித்த ரோபோக்களை வழங்குவதற்கான அனுசரணை வழங்கியதுடன், அதனை செயற்படுத்தும் திறன் கொண்ட தங்களது நிபுணர்களின் ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளன.

முதலாவது பொறியியல்துறை சேவைகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஆசிரி முகந்திரம்கேயின் மேற்பார்வையின் கீழ் அப்படைப்பிரிவைச்சேர்ந்த படை வீரர்களினால் இரண்டு வாரங்களுக்கும் குறைந்த காலப்பகுதிக்குள் அவசர தேவைகளுக்கு ஏற்ப முழு கட்டிடத்தையும் புனர்நிர்மாணம் செய்து தமது பணிகளை நிறைவு செய்துள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கட்டிடத்தொகுதியில் சுகாதார வசதிகள், சமையல் வசதிகள்,  ஓய்வறைகள், சமையலறை மற்றும் ஏனைய வசதிகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.