முல்லேரியா வைத்தியசாலை வார்டுகளில் இலங்கை விமானப்படையினரால் கண்காணிப்பு கேமரா தொகுதி நிறுவல்
ஏப்ரல் 09, 2020முல்லேரியா தள வைத்தியசாலையில் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கும் ஒலிபெருக்கி சிஸ்டம் மற்றும் 4 வார்டுகளுக்கான வை-பை மூலம் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கெமரா தொகுதி என்பன இரத்மலானை விமானப்படை தள இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல் பிரிவின் தொழில்நுட்ப குழுவினால் நிறுவப்பட்டது.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்ட குறித்த தொழில்நுட்ப கருவிகளை பொருத்தும் நடவடிக்கை மூலம் சுகாதார பணியாளர்கள், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பான தூர இடைவெளியில் இருந்து கண்காணிக்க முடிவதோடு அவர்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்க முடியும்.
இவ் வைத்தியசாலையில் தொழில்நுட்ப கருவிகளை பொருத்தும் நடவடிக்கைகள், இரத்மலானை விமான படை தளத்தின் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பிரிவின் கட்டளைத் தளபதி குரூப் கெப்டன் அருண் ஜெயதிலகவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
சிசிடிவி மற்றும் பிற வசதிகளை நிறுவும் இந்நடவடிக்கை இலங்கை விமானப்படையின் இரசாயனவியல் உயிரியல் கதிரியக்க அணுசக்தி மற்றும் வெடிபொருள் பிரிவினால் 24 மணி நேரத்திற்குள் நிறைவு செய்யப்பட்டது.
குறித்த தொழில்நுட்ப கருவிகளை நிறுவும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை விமானப்படை வீரர்கள், பாதுகாப்பான ஆடைகள் அணிந்து இருந்ததை உறுதி செய்ததுடன் அவர்களின் பணிகள் நிறைவு பெற்ற பின்னர் முறையாக கிருமித்தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.