கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஹோமாகம தள வைத்தியசாலை வார்டு தொகுதி விமானப் படையினரால் மாற்றியமைப்பு

ஏப்ரல் 11, 2020


ஹோமாகம தள வைத்தியசாலையினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில், கட்டுநாயக்க விமானப்படைத் தள சிவில் பொறியியலாளர் பிரிவினால் இவ் வைத்தியசாலையின் முதலாம் இலக்க வார்டு தொகுதி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பணிப்புரைக்கமைய விமானப்படை சிவில் பொறியியல் பணியக வழிகாட்டுதலின் கீழ் விமானப்படை அதிகாரி ஒருவர் மற்றும் 10 விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய குழுவினர், குறித்த வார்ட் தொகுதியின் ஒழுங்கமைப்பு பணிகளை மூன்று நாட்களுக்குள் நிறைவு செய்தனர்.

குறித்த வார்டு தொகுதியினை திருத்தி அமைப்பதற்கான நிதி உதவிகள் நலன் விரும்பிகளினால் வழங்கப்பட்ட அதேவேளை, தொழில்நுட்ப உதவி மற்றும் பணி குழாம் ஆகியன இலங்கை விமானப் படையினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.