இலங்கை கடற்படையின் புதிய கப்பலுக்கு ஜனாதிபதியால் அதிகாரமளிப்பு

ஜூன் 07, 2019

அமெரிக்க அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படையின் மிக நீளமான ஆழ்கடல் ரோந்து கப்பலான P 626 கப்பலுக்கு முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் எஸ் எல் என் எஸ் 'கஜபாகு' என அதிகாரமளித்து வைக்கப்பட்டது. குறித்த கப்பலுக்கு அதிகாரமளிக்கும் நிகழ்வு நேற்று மாலை (ஜுன், 06) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

கொழும்பு துறைமுக வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியினை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் வரவேற்றதுடன் ஜனாதிபதிக்கு விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையொன்றும் அளிக்கப்பட்டது. பின்னர், கப்பலுக்கான அதிகாரமளிக்கப்பட்ட பத்திரத்தினை ஜனாதிபதி புதிய கப்பலுக்கான கட்டளை அதிகாரியிடம் வழங்கி வைத்தார். அவ்வேளை கப்பலின் கட்டளை அதிகாரி குறித்த பத்திரத்தை வாசித்தார்.

இந்நிகழ்வில், மகா சங்க உறுப்பினர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் திரு. உதய ஆர் செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட (ஓய்வு), இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை சிப்பாய்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.