கடற்படையினரால் ரூ. 3270 மில்லியன் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது
ஏப்ரல் 11, 2020இலங்கை கடற்படையினரால் ரூபா 3270 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கை போது குறித்த போதைப் பொருட்கள் நேற்றய தினம் காலை வேளையில் கைப்பற்றப்பட்டன.
இந்த இனந்தெரியாத படகில் இருந்து சுமார் 260 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 56 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப் பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த படகு, எந்த ஒரு நாட்டினதும் கொடி பறக்கவிடப்படாத நிலையில் கடற்பரப்பில் பயணித்திருந்த வேளையில் 14 நாட்களாக இடம்பெற்ற கண்காணிப்பு நடவடிக்கையில் தரையிலிருந்து சுமார் 548 கடல் மைல் தொலைவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரான் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு பிரஜைகள் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணம் செய்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறுதி செய்யப்பட்ட பின்னர் குறித்த போதைப்பொருள் படகினை நாட்டின் தென்பகுதியில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து படகு இடைமறித்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது.
வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும் இலங்கை கடற்படை யின் ஆழ்கடல் ரோந்து படகு இந்த போதைப்பொருள் படகின் நகர்வினை கண்டறிந்த பின்னர் குறித்த படகினை கண்காணிக்கும் பணியினை கடந்த மார்ச் 30ம் திகதி தொடங்கிய நிலையில் நேற்று காலை குறித்த படகினை சோதனையின் பின் கைப்பற்றியது.
இதேவேளை, கடந்த மார்ச் 28ம் திகதி இலங்கை கடற்படையினரால் ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ரூபா 12.5 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.