கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிர் இழந்த சடலங்களின் தகன கிரியைகள் தொடர்பாக புதிய விதிமுறைகள் வெளியீடு

ஏப்ரல் 12, 2020
  •  சடலம் 800 முதல் 1,200° செல்சியஸ் வெப்பநிலையில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலம் வரை தகனம் செய்யப்பட வேண்டும்
  •  தகன கிரியைகள், அதிகாரிகளினால் நியமிக்கப்பட்ட குறித்த நபர்களால் மட்டுமே கையாளப்பட வேண்டும்
  •  பயன்படுத்தப்படும் அனைத்து பாதுகாப்பு உடைகள் உட்பட அனைத்து பொருட்களும் சவப்பெட்டியுடன் சேர்த்து எரிக்கப்பட வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபரின் சடலம் 800 முதல் 1,200° செல்சியஸ் வெப்பநிலையில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலம் வரை முழுமையாக தகனம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபரின் தகன கிரியைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய புதிய விதிமுறைகள் தொடர்பாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் கையெழுத்திடப்பட்ட விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

புதிய விதிகளின் கீழ், இறந்த ஒரு நபரின் சடலம் வைரஸ் தாக்கம் இறந்ததாக சந்தேகிக்கப்படுமாயின் குறித்த சடலத்திற்கும் இதே நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

1897 ஆம் ஆண்டு 3ம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்கள் தடுப்பு கட்டளைச் சடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவுகளின் கீழ் குறித்த விதிமுறைகள், சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த நபரின் இறுதி கிரியைகள், புதிய விதிமுறைகளின் பிரகாரம், சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட வழிமுறைகளுக்கு அமைய இத்துறையுடன் தொடர்புடைய பொருத்தமான அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மயானம் அல்லது பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த நபரின் சடலத்தை இத்துறையுடன் தொடர்புடைய பொருத்தமான அதிகாரி தவிர்ந்த வேறு எவரிடமும் கையளிக்க இடமளிக்கப்படமாட்டாது என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதில் இருந்து தடுக்க இந்த வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள இவ் விசேட வர்த்தமானியில், மயானத்தில் அல்லது பரிந்துரைக்கப்பட்ட இடத்தில் சடலத்தை கையாளும் நபர்களால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உடைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை N அகற்றுவது தொடர்பாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப, அவைகள் சவப்பெட்டியுடன் சேர்த்து எரியூட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதி முறையின் கீழ் மீள பயன்படுத்தப்படக் கூடிய உபகரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய
கிரமமாக சுத்திகரிக்கப்பட்டு மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

சடலத்தின் அஸ்தியானது, அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவர்களிடம் ஒப்படைக்க முடியும் என இவ் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படங்கள் அனுசரணை - www.aljazeera.com