--> -->

கொரோனா வைரஸ் பரவல் இருந்து நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் - இராணுவத் தளபதி

ஏப்ரல் 13, 2020

  •  இராணுவத்தினர் சுகாதார வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என தெரிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் இருந்து நாட்டை பாதுகாக்க இராணுவத்தினர் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

"இராணுவ வீரர்கள் சுகாதார வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கும் முக்கிய பொறுப்பு எங்களை சார்ந்தது. எங்களது வாழ்க்கை இன்று மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த புத்தாண்டு காலத்திலும் நாம் ஒன்று சேர்ந்து அதனை கொண்டாட முடியாத நிலையில் உள்ளோம். இத்தருணத்தில் நாம், எம்மையும் எம்மைச் சார்ந்தவர்களையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் நாட்டின் சிறந்த குடிமகன் என பெருமிதம் கொள்ள முடியும்" என வடக்கில், படையினர் மத்தியில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்

வட மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னணியில் செயற்படும் படையினரை பார்வையிடுவதற்காக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான விஜயமொன்றை இராணுவத்தளபதி மேற்கொண்டார்.

பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் சவாலான பணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நம்பிக்கையுடன் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார்.

"நாம், இராணுவம், 'சாத்தியமற்றது என எதுவும் இல்லை' எனும் தொணிப்பொருளுக்கு அமைய நாம் எமது பணியினை சிறப்பாக செய்து வருகின்றோம்," என தெரிவித்த அவர், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர் உட்பட அனைத்து இலங்கையர்களும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் எம்மால் ஆற்றப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடிய விலைமதிப்பற்ற சேவைகளை வியந்து பாராட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தாலி, ஈராக், ஈரான் மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதல் இரண்டு தனிமைப்படுத்தும் மையங்களுடன் ஆரம்பித்த எமது பணி, இன்று சுமார் 50 தனிமைப்படுத்தும் மையங்களை இராணுவம் ஏற்படுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

"இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாம் இந்த இலக்கை மிகக் குறுகிய காலத்தினுள் அடைய முடிந்தமைக்கு எமது படை வீரர்களின் கடின உழைப்பே காரணம் எனக் கூறினால் அது மிகையாகாது "என தெரிவித்த இராணுவத் தளபதி, இதற்காக இலங்கை இராணுவத்தின் அனைத்து படையணிகள் மற்றும் படைப்பிரிவுகளினால் அளிக்கப்பட்ட சேவைகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

 

 

இவ் விஜயத்தின் போது லெப்டினன் ஜெனரல் சில்வா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் பாதுகாப்பு படை தலைமையகங்களில் உள்ள படையினர் மத்தியில் உரையாற்றியதுடன் 64 மற்றும் 52 பிரிவுகள், 574 மற்றும் 552 பிரிகேட்களில் உள்ள படை வீரர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பதில் கடமையாற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற வகையில் அவர், வட பிராந்திய கடற்படை கட்டளையகத்திற்கும் பலாலியில் உள்ள விமானப்படை தளத்திற்கும் விஜயம் செய்ததுடன் அங்குள்ள படையினர் மத்தியில் உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.