இடைநிறுத்தப்பட்ட சீன தூதரக ட்விட்டர் கணக்கு மீண்டும் பாவனையில்

ஏப்ரல் 14, 2020

நேற்றைய தினம் இடைநிறுத்தப்பட்டிருந்த சீனத் தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு இன்று முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு நேற்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் இந்நிலையில் அது இன்று முதல் செயற்படுவதாகவும் சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லூவோ சோங் தெரிவித்துள்ளார்.

சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு எவ்வித காரணமுமின்றி ஏப்ரல் 13ம் திகதி நிறுத்தப்பட்டதாக தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சீன தூதரகம் " பொதுமக்களின் தவறான புரிதலை தவிர்க்கும் வகையில் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு"  டுவிட்டர் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு பதிலளித்த டுவிட்டர் நிறுவனம் இச்சம்பவம் 'தொழில்நுட்ப கோளாறு' காரணமாக ஏற்பட்டதாகவும் தூதரக கணக்கு முடக்கப்பட்டதற்காக தாம் மன்னிப்புக் கோருவதாக, டுவிட்டர் நிறுவனம்  பதிலளித்துள்ளதாக சீன தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேச்சுச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் எனவும் ஆனால் ஆதாரமற்ற, இனவெறி, வெறுப்புபேச்சு ஆகியன பரப்பப்படுவதற்கு எதிராக  செயற்பட வேண்டும் எனவும் தூதரகம் விடுத்துள்ள  ஊடக  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது