இராணுவத்தினரின் எம்ஆர்ஈ பொதிகள் தயாரிப்பு ஆரம்பம்
ஜனவரி 19, 2019இலங்கை இராணுவத்தினர், வயம்ப பல்கலைக்கழக ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி பிரிவின் ஒத்துளைப்புடன் வெலிகந்தை கண்டக்காடு இராணுவ பண்ணையில் உணவு பொதிகள் (Meal Ready to Eat) தயாரிக்கும் நிலையத்தினை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையத்தில் உணவுகள் பொதியிடும் நடவடிக்கைகள் வைபவரீதியாக நேற்று (ஜனவரி, 18) ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இவ் உணவுப்பொதிகள் வயம்ப பல்கலைக்கழக ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி கிளை, கால்நடை மற்றும் விவசாய பணியகம் ஆகியவற்றுடன் விஷேட படைகள் பிரிகேட்டினுடைய மூன்று சிறப்புப் படைகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இப்புதிய உற்பத்தி மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியை சுமார் 60% வீதம் சேமிக்கமுடியும் என்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கண்டக்காடு உணவு பொதியிடும் நிலையத்தினூடாக ஒரு நாளைக்கு சுமார் 900 உணவு பொதிகள் வெளியிடமுடியும் என்பதாகவும், இதன் மூலம் ரோந்து நடவடிக்கை, காவல் கடமைகளை மேற்கொள்ளல், காட்டில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடல் மற்றும் குறிப்பாக தேசிய அனர்த்த காலங்களில் இராணுவ வீரர்களின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப இவ்வுணவுப் பொதிகளை வழங்க முடியம் என்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இவ்வுற்பத்தி, பதப்படுத்தப்பட்டு வேகவைத்த அரிசி, நிலக்கடலை, சோயா, கோழி, காய்கறிகள் உள்ளடங்கலாக ஒவ்வொரு உணவுப்பொதிகளும் சிறந்த சுகாதார தரத்துடன் (காலை உணவு- 200g, பகலுணவு -400g மற்றும் இரவுணவு - 400g) மூன்று வெவ்வேறு பொதிகளாக தயாரிக்கப்படுகின்றன.
இவ்வுற்பத்தி நிலையமானது, சுமார் நான்கு மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்களை கொண்டுள்ளது. இலங்கை இராணுவ பொது சேவைகள் படைபிரிவினருடன் வயம்ப பல்கலைக்கழகத்தின் கீழ் இராணுவத்தால் தெரிவுசெய்யப்பட்ட பதினைந்து பணியாளர்களும் தொடர்ந்து இங்கு பணியாற்றுவார்கள். மேலும், பின்தங்கிய பிரதேசமான வெலிகந்த பிரதேசத்தில் நிறுவப்பட்ட இவ் உற்பத்தி நிலையத்திநூடாக உள்ளூர் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திறப்புவிழா நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் கலந்து சிறப்பித்தார்.