இராணுவத்தின் உடனடி தலையீடுகள் இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைத்தன - பாதுகாப்பு செயலாளர்

ஏப்ரல் 17, 2020

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் தொற்று நோய் மருத்துவமனைக்கு வந்தபின் முழு சிகிச்சை முறையும் முடிவடைகிறது என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால் அதன்பின்னரே முழு விசாரணையும் இராணுவ புலனாய்வு உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளின் ஈடுபாட்டுடன் தொடங்குகிறது. இந்த அதிகாரிகள், கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நபர்களையும், அவர்கள் இருக்கும் இடத்தையும், தனிமைப்படுத்தலைத் தவிர்ப்பவர்களையும் தேடி தூக்கமில்லாத இரவுப் பொழுதினை கழிக்கின்றனர்.

 

 

  •  சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றி, நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் படிப்படியாக தளர்த்தப்படும் என தெரிவிப்பு
  •  அவதானிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்பான குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளன
  •  இராணுவ புலனாய்வு மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் தொலைபேசி எண்களைக் கண்காணிப்பது, அவர்கள் யாருடன் எங்கு எப்போது தொடர்புகளை தேடினார்கள் என்பதை அறிவதற்காக மட்டுமே
  •  பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பான்மையானவர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து நாடு திரும்பியோர்கள்
  •  வதந்தியை பரப்புபவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்படுவார்கள்
  •  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை அனைவருக்காகவும் திறந்திருக்கும்- ஏழை, பணக்காரன், இனக்குழுக்கள் என்ற பாகுபாடு காட்டப்படமாட்டாது என தெரிவிப்பு
  • குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டுக்குள்ளேயே இருப்பதுடன் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகித்தால் மறைக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தி வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கமாறு பொதுமக்களிடம் கோரிக்கை


புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புக்களுடன் இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட உடனடி தலையீடுகளே,ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம், இறப்பு எண்ணிக்கை என்பன கணிசமான அளவு குறைவடைய காரணமென பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை இராணுவத்தின் பங்களிப்பு மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கும், நோய் தொடர்பான பேரழிவுகளைத் தடுக்க சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்களுடன் நாட்டின் இராணுவம் எவ்வளவு திறம்பட பயன்படுத்தப்படலாம் என்பதற்கு இந்திகழ்வு ஒரு சிறந்த முன்மாதிரியாகும் என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் குணரத்ன, பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு அளித்த விசேட பேட்டியில், வாழ்வா சாவா என்ற சூழ்நிலையில், தேசிய பாதுகாப்பினை பேணும் வகையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இராணுவமும் பொலிஸாரும் பங்களிப்பு வழங்கினார்கள் என அவர் தெரிவித்தார்.

பேரழிவை ஏற்படுத்தும் முற்றிலும் மாறுபட்ட ஒரு யுத்தத்தில் இராணுவம் காலடி எடுத்து வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதாகும். இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் இராணுவம் போராடவேண்டும். சரியாக போராடாவிட்டால் அது முழு தேசத்தையும் அழித்துவிடும் என தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், கொரோனா வைரஸ் பரவலைத் குறைப்பதற்கும், பொலிஸ் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் பேணுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையின் கீழ் அரசாங்கம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மூலோபாயத்தை வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.