வீடுகளில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு ஞாபகார்த்த தின நிகழ்வுகள்

ஏப்ரல் 17, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பொது நினைவு நாள் நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள கொழும்பு பேராயர் அதியுத்தம கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அனைத்து நினைவு நாள் நிகழ்வுகளையும் பொதுமக்கள் பங்கேற்பின்றி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுமக்களுக்கு கருத்து தெரிவித்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்களின் பங்கேற்பு இன்றி ஆராதனைகள் நிகழ்த்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த துயர சம்பவத்தில் பலர் பலியாகியுள்ளதால், இன மத பேதமின்றி இந்த நினைவு தின வைபவத்தில் அனைவரினதும் பங்கேற்பையும் நாம் எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21ம் திகதி காலை 8.40 மணியளவில் இந்த நிகழ்வைக் நினைவுகூறும் வகையில் அனைத்து தேவாலயங்களும் தங்கள் மணிகளை ஒலிக்குமாறு
கொழும்பு பேராயர் கேட்டுக்கொண்டதுடன் காலை 8.45 மணி அளவில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நாடு முழுவதும் இரண்டு நிமிடமௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அனைவருக்கும் வசதியான இடத்தில் மெழுகுவர்த்தி அல்லது விளக்குகளை ஏற்றி வைத்ததன் பின்னர் மத அனுஷ்டானங்களை பின்பற்றுமாறும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார்.