கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து வெளியேறும் மூலோபாயம் தொடர்பாக கலந்துரையாடல்

ஏப்ரல் 18, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து வெளியேறும் மூலோபாயங்கள் தொடர்பான கலந்துரையாடல் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

வேகமாக பரவும் வைரஸினை கட்டுப்படுத்தல், இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்புதல் ஆகிய நடவடிக்கைகள் சர்வதேச நிபுணர்களின் பரிந்துரைகள், கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள், விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இடம்பெறவுள்ளன.

புத்தாண்டைத் தொடர்ந்து முதலாவது குழு கூட்டம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று கூடியது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அணில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இக் குழு கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரியின் மருத்துவ நிபுணர்கள், சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களை தடுமாற்ற நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தனர்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் இதே தோரணையில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். அத்துடன் அவர்கள், தனிமைப்படுத்தல் மையங்களில் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டினர்

இக்குழு கூட்டத்தில் கலந்துரையாடலின் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி செயலகத்தில் இயங்கும் ஜனாதிபதி செயலருக்கு அனுப்பப்பட உள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.