இலங்கை – பிலிப்பைன் அரச தலைவர்கள் சந்திப்பு
ஜனவரி 17, 2019இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார, வர்த்தக தொடர்புகளை மீண்டும் பலப்படுத்துவதற்காக பொருளாதார சபை
பாதுகாப்பு, சுற்றுலா, விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஐந்து புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து
இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை மீண்டும் முன்னெடுத்து செல்வதற்காக பொருளாதார சபையொன்றினை நிறுவுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.
பிலிப்பைன்ஸுக்கான நான்கு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (16) பிற்பகல் இடம்பெற்றபோதே அரச தலைவர்கள் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தினர்.
அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையான Malacanang மாளிகைக்கு இன்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் சினேகபூர்வமாக வரவேற்றார்.
இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இரு நாடுகளினதும் தேசியக் கொடிகளை ஏந்திய சிறுவர்கள் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்குபற்றியதுடன், பல கலாசார நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.
இரு நாட்டு அரச தலைவர்களுக்கும் இடையிலான சுமுக கலந்துரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 58 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதலாவது அழைப்பையேற்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தமக்கு விடுக்கப்பட்ட இந்த கௌரவமான அழைப்புக்கு ஜனாதிபதி அவர்கள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்த அதேவேளை, ஜனாதிபதி அவர்களின் வருகை இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு முக்கிய சந்தர்ப்பமாகும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் அனுகூலங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்துதல் தொடர்பாக இதன்போது அரச தலைவர்கள் விரிவாக கலந்துரையாடியதுடன், அச்செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் தூதரகமொன்றினை கொழும்பில் ஸ்தாபிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்காக பொருளாதார சபை ஒன்றினை நிறுவுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அதேபோன்று இரு நாடுகளுக்குமிடையே விவசாயத் துறை தொடர்புகளை மேம்படுத்த விசேட கவனம் செலுத்தியதுடன், விவசாய தொழிநுட்ப பயிற்சி நடவடிக்கைகளின் போது இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொடுக்க தமது நாடு தயாராக உள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையே கல்வி, சுற்றுலா துறை ஆகியவற்றில் உறவுகளை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையிலான விமானப் போக்குவரத்து சேவையினை மேம்படுத்த அரச தலைவர்கள் கவனம் செலுத்திய அதேவேளை, அவ்விடயம் தொடர்பில் கண்டறிவதற்காக எதிர்வரும் மார்ச் மாதமளவில் பிலிப்பைன்ஸ் தூதுக்குழுவொன்றினை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அதற்கான விரிவான செயற்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு இவ்விடயத்தில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக அரப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அரச தலைவர்கள் கலந்துரையாடியதுடன், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் அவர்களின் அர்ப்பணிப்பினை பாராட்டிய ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பிராந்தியத்தில் போதைப்பொருள் பரிமாற்றத்தினை தடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்கவும் பிராந்திய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்காக ஒத்துழைப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
பிராந்திய நாடுகள் என்ற வகையில் ஏற்பட்டுள்ள சகல சவால்களையும் வெற்றி கொள்வதில் ஒத்துழைப்புடன் செயற்படுதல் மற்றும் சிறந்த புரிந்துணர்வுடன் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான உறவுகளை இரு நாடுகளினதும் நன்மைக்காக எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் இருநாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய வீரர்களுள் ஒருவரான கலாநிதி ஜோஸ் ரிசால் 19ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்திருப்பதனூடாக இருநாடுகளுக்குமிடையே ஆதிகாலம் முதலே சிறந்த நட்புறவு காணப்பட்டுள்ளமை என்பது தெளிவாகின்றதென தெரிவித்தார்.
அரச தலைவர்களின் சந்திப்பினை தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையே ஐந்து புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கிடையே பொருளாதார, சுற்றுலா, விவசாயம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக கைச்சாத்திடப்பட்ட புதிய உடன்படிக்கைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் பிலிப்பைன்ஸுக்கான இலங்கை தூதுவர் அருணி ரணராஜா ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.
இதனிடையே பிலிப்பைன்ஸ் தேசிய வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்விலும் இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார்.
மணிலா நகரின் வரலாற்று புகழ்பெற்ற நகரப் பூங்காவான ரிஷால் பூங்காவிலுள்ள நினைவுத்தூபி வளாகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள், அங்கு பூங்கொத்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
பிலிப்பைன்ஸ் புரட்சிக்கு வித்திட்ட தேசிய வீரர்களை நினைவுகூருவதற்காக இந்த நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நன்றி: pmdnews.lk