வடக்கில் 1200 ஏக்கருக்கு மேற்பட்ட காணி விடுவிப்பு
ஜனவரி 22, 2019முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உடையார்கட்டு மற்றும் மூன்று இராணுவப் பண்ணைகள் உட்பட இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மொத்தம் 1201.88 ஏக்கர் திங்கள் கிழமையன்று ( ஜனவரி,21)விடுவிக்கப்பட்டன. இதற்கேற்ப, விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள், முல்லைத்தீவு முள்ளியவளை, வித்யானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவ தளபதியிடமிருந்து ஆவணங்களை ஏற்றுக் கொண்டபின் ஜனாதிபதி அவர்கள் காணி விடுவிக்கும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஆளுநர் மற்றும் குறித்த மாவட்ட செயலாளர்களிடம் வழங்கிவைப்பட்டது.
இதற்கேற்ப விடுவிக்கப்படும் காணியில், கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவு பிரதேசத்தில் 120 ஏக்கர் காணியும், யாழ்ப்பாணத்தில் 46.11 ஏக்கர் காணியும், வன்னியில் 63.77 ஏக்கர் தனியார் காணியும் அடங்கும்.
இதேவேளை, தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தும் பிரதான நிகழ்வு முள்ளியவளை, வித்யானந்த மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி அவர்களினால் முல்லைத்தீவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. .
இத்திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் குறித்த பிராந்தியத்தில் படையினரால் 70 பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பிரசுரங்களை விநியோகிப்பதன் மூலம் இத் தேசிய திட்டத்தில் இணைந்தனர். மேலும் 2019 உலக கிண்ண கிரிகெட் போட்டியினை முன்னிட்டு 'எர்த் வாட்ச்மேன்' திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாடுமுழுவதும் இரண்டு மில்லியன் மரங்களை நடும் திட்டமும் இதே தினத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.