“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு நாளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பம்
ஜூன் 03, 2019“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு நாளை (03) முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமூக நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் மக்களுக்கு அதிக நன்மைகளை பெற்றுக்கொடுத்தல், நீண்ட காலமாக இருந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை இந்நிகழ்ச்சித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், மாவட்டத்தின் 06 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் இனங்காணப்பட்டுள்ள பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிறுநீரக நோய் ஒழிப்புடன் தொடர்புடைய பல்வேறு விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு சிறுநீரக நோய் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், துணுக்காய் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மல்லாவி வைத்தியசாலையில் 37 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் நிவாரண மத்திய நிலையம் ஜூன் 08ஆம் திகதி ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதேநேரம் வெலிஓயா பிரதேச செயலக பிரிவில் சிறுநீரக நோயாளிகள் உள்ள 300 குடும்பங்களுக்கு நச்சுத்தன்மையற்ற அரிசி கூப்பன்களை வழங்குதல், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 10,000 பேருக்கு சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான 28 சிகிச்சை முகாம்களை நடாத்துதல், சிறுநீரக நோய் பற்றி அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. மேலும் 16 மில்லியன் ரூபா செலவில் சுமார் 2,500 குடும்பங்களுக்கு பயனளிக்கும் 10 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல், சிறுநீரக நோய் இடர் நிலைமைகளைக் கொண்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த சிறுநீரக நோயாளிகளின் குடும்பங்களுக்கு 6.7 மில்லியன் ரூபா செலவில் சுமார் 8,000 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வீட்டு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
இதேநேரம் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம், சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித்திட்டம், தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு விசேட நிகழ்ச்சித்திட்டங்களும் மாவட்டம் முழுவதும் நடாத்துவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மரநடுகை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளதுடன், மரக் கன்றுகளை வழங்குதல், உணவுப் பயிர் விதைகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தங்களது பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்களுக்கு நேரடியாக முன்வைப்பதற்கு இடமளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” நிகழ்ச்சித்திட்டமும் 03ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வெலிஓயா பிரதேச செயலத்திலும் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒட்டுச்சுட்டான் பிரதேச செயகத்திலும் 05ஆம் திகதி புதன்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலத்திலும் 06ஆம் திகதி வியாழக்கிழமை துணுக்காய் பிரதேச செயலகத்திலும் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.00 மணி முதல் 12.00 மணி வரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் பி.ப 1.00 முதல் பி.ப 4.00 வரை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
நன்றி: pmdnews.lk