கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற வேண்டிய அவசியம் கிடையாது - பாதுகாப்புச் செயலாளர்

ஏப்ரல் 22, 2020
  • இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை திறம்பட கையாள முடியும்
  • இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் இருநாடுகளுக்குமிடையில் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற எந்த ஒரு அவசியமும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் முப்படைமற்றும் பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி தமது திறன்களை ஏற்கனவே நிரூபித்துள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.

"எமது இராணுவம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அவசரகால நிலைமையை கையாள்வதில் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் தொழில்வான்மையை ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளது," என அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், ஒரு நாடு, அதன் புலனாய்வு நிறுவனங்களை, இராணுவ மற்றும் சுகாதார நிறுவனங்களுடன் இணைப்பதன் ஊடாக எவ்வாறு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் ஏனைய நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

"இலங்கையின் புலனாய்வு அமைப்புகள், கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் நெருக்கமாக தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இவ்வமைப்புக்கள், அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தும் செயல்முறைக்கு வழிகாட்டுகின்றன." என அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கையில் இந்திய இராணுவம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் அண்மையில் வெளியான செய்திகள் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், இவ்வாறாக இரண்டு நாடுகளுக்கு இடையில் எத்தகைய கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.