உடல் வெப்பநிலையை பரிசோதிக்க இராணுவத்தின் விரைவாக செயலாற்றும் விஷேட குழு ஈடுபாடு
ஏப்ரல் 23, 2020கொழும்பு மாவட்டத்திற்கு வருகைதருவோர் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் ஆகியோரின் உடல் வெப்ப நிலையை பரிசோதிப்பதற்காக இராணுவத்தின் விரைவாக செயலாற்றும் விஷேட குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் முன்மொழியப்பட்ட இந்த நடவடிக்கை, இலங்கை இராணுவத்தின் விரைவாக செயலாற்றும் விஷேட குழுவினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை இராணுவத்தின் 20 பேர் அடங்கிய விரைவாக செயலாற்றும் விஷேட குழுவினரால் கொழும்புக்கு வருகை தரும் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் நபர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
உயர் அபாய வலயம் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் குறித்த இந்தத் திட்டம் இராணுவத் தளபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையானது, உயர் உடல் வெப்பநிலையை கொண்ட நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் அவசியமான மருத்துவ சிகிச்சைகளுக்காக உரிய வைத்தியசாலைகளுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதற்கு உதவியாக அமையவுள்ளது.
இராணுவத்தினரின் வழிகாட்டுதலின் கீழ் உடல் வெப்பநிலை பரிசோதனையில் ஈடுபட்டுள்ள விரைவாக செயலாற்றும் படையினர் குழுவினருக்கு கொழும்பு மாவட்டத்திற்கு வருகைதரும் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை இராணுவத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.