30 கடற்படை வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து வெளிசர கடற்படைத்தளம் தனிமைப்படுத்தப்பட்டது

ஏப்ரல் 23, 2020
  • 29 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

நேற்றைய தினம், வெளிசர கடற்படைத் தளத்தில் கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானது உறுதியானதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 29 கடற்படை வீரர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை கடற்படையின் வெளிசர கடற்படைத்தளம் முற்றாக இன்றைய தினம் தனிமைப் படுத்தப்பட்டது.

விடுமுறையில் சென்ற கடற்படை வீரர் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் இருந்த ஏனைய வீரர்களுக்கும் இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அவர்களில் 29 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முதலில் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் சுதுவெல்ல பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் எனவும் அவர் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருக்கமாக செயற்பட்டபோது தொற்றுக்குள்ளானதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிசர கடற்படை தளத்தில் உள்ள அனைத்து கடற்படை வீரர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த கடற்படைத்தளமும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கடற்படைத் தளத்தில் உள்ள அனைத்து கடற்படை வீரர்களும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் விடுமுறையில் சென்றுள்ள ஏனைய வீரர்களும் மீள அழைக்கப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என லெப்டினன்ட் ஜெனரல் விவேந்திர சில்வா தெரிவித்தார்