கிழக்கில் மேலும் காணிகள் விடுவிப்பு
ஜனவரி 23, 2019அண்மையில் ( ஜனவரி, 18) கிழக்கு மாகாணத்தின் அம்பாறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது மற்றுமொரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் கிழக்கு மாகாணத்தின் கல்முனை பிரதேச செயலகத்தின் கீழுள்ள பல்லேகாடு பகுதியில் இராணுவத்தின் பாவனையில் இருந்த 39. 75 ஏக்கர் காணிகளின் உறுதிப் பத்திரங்கள் கிழக்கு மாகாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களினால் கிழக்கு மாகாண ஆளுனர் திரு. எம்.எல்.ஏ.எம் ஹிஷ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் திரு டி. எம். சரத் அபேகுணவர்தன ஆகியோரிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டு பின்னர் அம்பாறை மாவட்ட செயலாளர் திரு டீ. எம்.எல் பண்டாரநாயக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இராணுவத்தினர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரியளவிலான காணிகளை விடுவித்துள்ளனர். இதன்பிரகாரம் அண்மையில் ( ஜனவரி,21) முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் உடையார்கட்டு மற்றும் மூன்று இராணுவப் பண்ணைகள் உட்பட இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டஅரச மற்றும் தனியார் காணிகள் மொத்தம் 1201.88 ஏக்கர் விடுவிக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், முல்லைத்தீவு முள்ளியவளை, வித்யானந்த மகா வித்தியாலய நிகழ்வில் கலந்துகொண்டபோது விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.