கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசு பாராட்டு

ஏப்ரல் 24, 2020

நாட்டில் கொரோனா வைரஸை எதிர்த்து செயற்படுவதற்கு சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் வகிபாகத்தை ஜப்பானிய அரசு பாராட்டியுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் தோஷிஷிரோ கிடமுராவுக்மிடையிலான சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல் 24) இடம்பெற்றது. இதன்போது ஜப்பானிய பிரதித் தூதுவர் "கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நீங்கள் எடுத்த முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்" என தெரிவித்தார்.

360 பேர் மரணமடைந்துள்ள ஜப்பானில், மக்களை ‘வீட்டில் தரித்திருக்கமாறு’ அரசாங்கம் கோரியுள்ளது, எனினும் அங்கு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் எதுவும் விதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான தற்போதைய நிலைமையை விளக்கிய பாதுகாப்பு செயலாளர், இதற்காக அரசாங்கம் ‘ரூட் போல்ட்’ முறையைப் பயன்படுத்துகிறது எனவும் இம்முறை மூலம், அந்தந்த பகுதிகளில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புபட்ட அனைவரையும் கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உற்படுத்துகின்றது என குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் பணியை சுகாதார அதிகாரிகள் மட்டும் மேற்கொண்டிருந்தால், அது கட்டுப்படுத்த முடியாத ஒரு கட்டத்தை எட்டியிருக்கும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

நேற்று 30 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டது தொடர்பாக தெரிவித்த அவர், வெளிசர கடற்படைத் தளத்தில் உள்ள ஏனையோரைப் பாதுகாக்கவும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், கடற்படைத் தளத்திலுள்ள ஒவ்வொரு கடற்படை வீரருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், விடுமுறையில் உள்ள கடற்படை வீரர்களின் மீண்டும் கடற்படைத் தளத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

"முப்படை மற்றும் பொலிஸார் ஆகியோரைத் தவிர, குறிப்பிட்ட பகுதிகளை வைரஸிலிருந்து விடுவிப்பதற்காக, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களைக் கண்டறிய நாம் எமது புலனாய்வு பிரிவினரையும் பயன்படுத்துகிறோம்" என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

ஒரு பிரதேசத்தை அல்லது கிராமத்தை முடக்குவதற்கு முன்னர், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் நடத்தை மற்றும் அவர்களின் நெருங்கிய தொடர்புகளை முதலில் பகுப்பாய்வு செய்வதன் மூலம் இராணுவமும் பொலிசாரும் சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

"பகுப்பாய்வுக்கமைய, கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அப்பிரதேசத்தை முடக்கும் செயற்பாடு போதுமானதாக இல்லாவிட்டால், அரசாங்கம் முழு கிராமத்திலிருந்தும் மக்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும்," எனவும் "ஒரு சில குடும்பங்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தால், நாங்கள் அந்த குடும்பங்களை மட்டுமே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துகிறோம், ”என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த சந்திப்பில், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தல், விஷேடமாக போதைப்பொருள் மற்றும் மனித கடத்தலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புபடையினரின் திறன்களை மேம்படுத்துதல் தொடர்பாக பாதுகாப்பு செயலாளருக்கும் ஜப்பானிய பிரதித் தூதுவருக்கும் மிடையில் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பின்போது ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் பகோரா ககுவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.