வடக்கு மாணவர்களுக்கு கல்வி உதவி
ஜனவரி 24, 2019வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு தொகை பாடசாலை கற்றல் உபகரணங்கள் அண்மையில் (ஜனவரி, 21) இடம்பெற்ற நிகழ்வுகளின் போது விநியோகிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் “செனஹச சியபத” திட்டம் மற்றும் டயலாக் எக்ஸிஎடா குழுமம் ஆகியவற்றின் உதவியுடன் கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி இந்துக்கல்லூரி, பண்ணின்கட்டி அரசினர் கலவன் பாடசாலை, பாரதி இந்து பாடசாலை, புன்னரவி கலவன் பாடசாலை, புனித அந்தோனியார் கல்லூரி, முருசுமோடை கல்லூரி, கண்டவெளி மகா வித்தியாலயம், முருகானந்தா கனிஷ்ட பாடசாலை, வட்டக்கச்சி தெற்கு கலவன் பாடசாலை மற்றும் மாயவனூர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்ற வெவ்வேறு நிகழ்வுகளின்போது குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 2280 மாணவர்கள் மத்தியில் கற்றல் உபகரணங்கள் அடங்கிய அன்பளிப்பு பொதிகள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்விற்கு வடக்கு இராணுவ வீரர்கள் அன்பளிப்புக்களை விநியோகிப்பதற்கான ஒத்துழைப்பினை வழங்கினர்.
இக்கல்வி உதவியானது, அண்மையில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட மாணவர்கள் மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவத்தினர் தர்மபுரம் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அதேதினம் 100 உலருணவு பொதிகளை விநியோகித்தனர்.
மேலும் மற்றுமொரு நிகழ்வின்போது, வடக்கில் உள்ள படைவீரர்கள் முல்லைத்தீவு பிராந்தியத்தில் கல்வி பயிலும் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு கிழக்கு இராணுவத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட பாடசாலை கற்றல் உபகரணங்களை அன்பளிப்பு செய்தனர். பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரால் அனுப்பி வைக்கப்பட்ட நன்கொடை பொதிகளே இவ்வாறு சுமார் 220 தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பயிற்சி புத்தகங்கள் உட்பட பாடசாலை உபகரணங்கள் அடங்கிய சுமார் 250 பொதிகள் யாழ் மாவட்டத்தில் கல்வி பயிலும் நான்கு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு சனிக்கிழமையன்று (ஜனவரி, 19) விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.