இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் வெசக் பண்டிகை கொண்டாட நடவடிக்கை

ஏப்ரல் 29, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவார்கள் கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் மற்றும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரை நேற்று (28) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி  எதிர்வரும் வெசக் பண்டிகையை கொண்டாடுவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவிக்கின்றது.

மேலும் எதிர்வரும் வெசக் பண்டிகையை வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதை மகாநாயக தேரர் சங்கைக்குரிய தம்மாலங்கார அவர்கள் உடன்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமயக்கிரியைகளில் ஈடுபடுமாறு பௌத்த மக்களுக்கு அறிவிப்பதாக மகாநாயக்க தேரர் குறிப்பிட்டார். அதற்காக ஊடகங்களை பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 வைரஸ் தொற்று குறித்த தற்போதைய நிலைமைகளை கேட்டறிந்த மகாநாயக்க தேரர் மற்றும் கார்டினல் அவர்களும் வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நடவடிக்கைகளையும் பாராட்டினர்.

எதிர்வரும் வாரங்களில் விரைவில் ஊரடங்கு சட்டத்தையும் தளர்த்தக்கூடியதாயிருக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கேட்டறிந்த மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னால் உள்ளவர்களை கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தற்கொலை தாக்குதலின் மூலம் மரணத்தையும் கடந்த நோக்கங்கள் உள்ளதென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள் அந்த நோக்கங்களின் பின்னால் உள்ளவர்களை கண்டறிய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.