கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடும் முப்படை வீரர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் - பாதுகாப்பு செயலாளர்

ஏப்ரல் 29, 2020

முப்படை வீரர்களுக்கும் விசேடமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போராடும் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் முதாலவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டது தொடக்கம் நாட்டு மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் முப்படை வீரர்கள் முக்கிய பங்காற்றிவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.  .

வெலிசரையில் உள்ள இலங்கை கடற்படை தளத்தில் அதிகமான கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிவதற்காக சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்போதே அவர்கள் இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதேவேளை மக்களை பாதுகாக்க முயற்சிக்கும் இவர்கள் விடுமுறைக்காக அவர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கும் வேளையில் அவர்களுக்கு எதிராக மக்கள் முறைப்பாடுகள்  மேற்கொண்டிருப்பது  மிகவும்  துரதிஷ்டவசமானாதாகும் என அவர் தெரிவித்தார்.

வெலிசறை கடற்படைத் தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனவர்கள்  பதிவானதை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய  அனைத்து இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் சகல விடுமுறைகள் இரத்துசெய்யப்பட்டு உரிய முகாம்களுக்கு வரவழைக்கப்பட்டதாக மேஜர் ஜெனரல்  குணரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படாதல் விடுமுறையில் வீட்டிலிருந்த படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அயலவர்களின் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதம், வெள்ள அனர்த்தம், மண்சரிவு, சுனாமி மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளிலிருந்தும் முப்படை வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த மக்களை பாதுகாத்ததை மறந்துவிட்டார்கள். இந்நிலையில் படைவீரர்கள் இதுபோன்று பாதிப்புக்குள்ளாகியுள்ள போது மக்கள் அவர்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவளை, பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய பாதுகாப்புச் செயலாளர், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னின்று செயற்படும் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் துன்புறுத்தாமல், அவர்களுடன் இணைந்து செயற்படுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.