சீனாவினால் நன்கொடையாக மூன்றாம் கட்டமாக வழங்கப்படவுள்ள மருத்துவ பொருட்கள் நாளை வருகை

மே 07, 2020

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன் கொடையாக அளிக்கப்பட்ட 30,000 கொரோனாவைரஸ் நியூக்ளிக் அமில சோதனை கருவிகள் (PCR பரிசோதனைக்காக பயன்படுத்தக் கூடியவை) மற்றும் 15,000 சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் முழு மேலாடைகள் என்பன நாளை மாலை 6.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

கொழும்பு மற்றும் சீனாவின் ஷாங்காய் நகரத்திற்குமிடையிலான போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் சீனா கிழக்கு ஏயார்லைன்ஸுக்கு சொந்தமான MU231 விமானம் மூலம் மூன்றாம் கட்ட மருத்துவ பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் ஊடக பேச்சாளர் லுவோ சோங் தெரிவித்தார்.

ஏப்ரல் 29ம் திகதியன்று, சீன தூதரக விவகாரங்களுக்கான அதிகாரி ஹூ வேயி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தபோது, சீன மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கிடையில் நிலவும் வலுவான ஒற்றுமை தொடர்பாக எடுத்துரைத்ததுடன் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு சீனா உதவிக்கரமளிக்கும் எனவும் தெரிவித்தார்.

சீனு அரசாங்கத்தினால் அளிக்கப்படும் மூன்றாம் கட்ட மருத்துவ உதவி பொருட்களில் 30,000 பரிசோதனைக் கருவிகள், 30,000 சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் முழு மேலாடைகள், 30,000 KN95 வகை முகக் கவசங்கள், 30,000 பாதுகாப்பு முகக் கண்ணாடிகள், 600,000 அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் முகக் கவசங்கள் என்பன உள்ளடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்து சீன அரசாங்கத்தினால் இலங்கை இதுவரை 42,024 PCR பரிசோதனைக் கருவிகள், 958,730 அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள், 139,280 KN95 வகை முகக் கவசங்கள், 14,380 சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் முழு மேலாடைகள் உட்பட ஏனைய மருத்துவ பொருட்கள் பலவும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

மேலும்,சிகிச்சையின் மேலும் வினைத்திறனாக மேற்கொள்ள சீன மருத்துவ அதிகாரிகளின் அனுபவங்கள் மற்றும் அறிவு என்பன இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் பகிரப்பட்டு வருகின்றது.

"இந்தமருத்துவ உதவி பொருட்கள் தொகுதியின் மீதமுள்ள மருத்துவ பொருட்கள் காலக்கிரமத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்" என தூதரக அதிகாரி சோங் தெரிவித்தார்.