ஐடீஎச் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட தாதியர்களுக்கான தங்குமிட வசதிகள் விமானப் படையினரால் கையளிப்பு
மே 08, 2020தேசிய தொற்றுநோயியல் பிரிவு வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் இலங்கை விமானப் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட தாதியர்களுக்கான தங்குமிட வசதிகள் இன்றைய தினம் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படையின் சிவில் பொறியியலாளர் திணைக்களத்தினால் தங்குமிட வசதிகளுக்கான நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டம், இலங்கை துறைமுக அதிகார சபையின் ஒத்துழைப்புடன் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை விமானப்படையின் கட்டுநாயக்க சிவில் பொறியியலாளர் பிரிவில் அங்கம் வகிக்கும் விங்க் கொமாண்டர் கே.எம்.பி. ஹேவாபத்திரன மற்றும் பிளைட் லெப்டினன்ட் ஐ.வி.சி. புத்திக தலைமையிலான 60 விமானப்படை வீரர்களைக் கொண்ட குழு இந்த நிர்மாணப்பணிகளை முன்னெடுத்தன.
இந்த கட்டிடம், குளியலறைகளுடன் வசதிகளுடன் கூடிய 16 அறைகளைக் கொண்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கான அத்திவாரம், தரைக்கு பளிங்கு டைலிடல் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தும் இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை ஏனைய நிர்மாணப்பணிகள் இலங்கை துறைமுக அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் 30 தாதியர்களுக்கு தங்குமிட வசதிகள் அளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துறைமுக அதிகார சபையின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்க மற்றும் இலங்கை விமானப்படையின் சிவில் பொறியியலாளர் திணைக்கள பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ருசிர சமரசிங்க ஆகியோர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதியர்களுக்கான தங்குமிட வசதிகளை கொண்ட கட்டிடத்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற வைபவத்தின்போது கையளித்தமை குறிப்பிடத்தக்கது.