தேவையுடைய குடும்பத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை வன்னி படையினர் கையளிப்பு

மே 09, 2020

எப்பாவல, இஹல ஹல்மில்லேவ, அதிராணிகம பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்காக, வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் படைவீரர்களால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.   

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிரியினால் பயனாளியான உபுல் வணசூரியாராய்ச்சியிடம் வைபவ ரீதியாக புதன்கிழமையன்று (மே,06) கையளிக்கப்பட்டது.   

மிக எளிமையான முறையில் இடம்பெற்ற வீட்டின் சாவியை கையளிக்கும் இந்த வைபவத்தில், அதிகாரிகள் குழு, பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள், இலங்கை இராணுவத்தின் ஏழாவது கவச படையணி வீரர்கள், திட்ட இணைப்பாளர், 212வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி கேர்ணல் அணில் பிரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.    

பிரத்தியேக தொடர்பு மூலம் அறியப்பட்ட அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையரான ப்ரீத்தி கஜநாயக்கவின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டின் நிர்மாணப் பணிகளுக்கு இலங்கை இராணுவத்தின் ஏழாவது கவச படையணி வீரர்கள் ஆளனி உதவி வழங்கியிருந்தனர்.   

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு, வசிக்கும் அறை, சாப்பாட்டறை, படுக்கையறைகள், குளியலறை, சமையலறை உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் பயனாளியின் நலன் கருதி அவருக்கு, வீட்டு பாவனை பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியனவும் குறித்த நிதி உதவியாளரினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.