கொழும்பு கடற்படை பயிற்சி 19 வெற்றிகரமாக நிறைவு
ஜனவரி 30, 2019இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கொழும்பு கடற்படை பயிற்சி 19' செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி, 29 ) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலங்கை கடற்படையின் புதிய நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துறாலவில் கடந்த சனிக்கிழமையன்று (ஜனவரி, 26) இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் பயிற்சிகள் ஆரம்பமானதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு நாட்களாக இடம்பெற்ற இக் கடற்படை பயிற்சியில் கடற்படையின் 'சிந்துறால', 'சாகர', 'சமுத்ரா', 'பிரதாப', 'சுரனிமல', 'மிஹிகத' , 'ரத்னதீப' ஆகிய எழு கப்பல்களும் கடலோர பாதுகாப்பு படையின் 'சுரக்ஸா ', 'சமுத்ராரக்ஷா' ஆகிய இரு கப்பல்களும் பங்கேற்றன. இதனோடு இணைந்து எட்டு அதி விரைவு தாக்குதல் படகுகள் மற்றும் இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகளும் இப்பயிற்சி நடவடிக்கையில் பங்குபற்றின.
இப்பயிற்சி நடவடிக்கையில், கடல் குண்டுகள் வைக்கப்பட்ட நீரில் கப்பலோட்டுதல், கப்பல்களை குழுக்களாக கையாளும் பயிற்சிகள், கடலில் வழங்கல் தேவைகள் தொகுத்தல், கடலில் இரவு நேரங்களில் போரிடல், கடலில் நபர்கள் மற்றும் பொருட்கள் பரிமாற்றம், பாதிக்கப்பட்ட கப்பல்கள் இழுத்துச் செல்லல், மற்றும் சமிக்ஞைகளை பரிமாற்றும் முறைகள் ஆகியன உள்ளடங்கியிருந்தன. மேலும், இப்பயிற்சியின் ஒரு அங்கமாக நோயாளி ஒருவரை கடலில் தரித்துள்ள கப்பலில் இருந்து விமானத்தின் மூலம் எவ்வாறு தரைக்கு கொண்டு செல்வது என்பது தொடர்பான ஒத்திகை காட்சியும் இடம்பெற்றது.
இதுபோன்ற சிறப்பு கூட்டு பயிற்சிகளின் மூலமாக படை நடவடிக்கைகளுக்காக தயார்நிலையில் இருத்தல் மற்றும் இரு படைகளினதும் பயிற்சி திறன்களை மேம்படுத்துதல் அத்துடன் எதிர்காலத்தில் இலங்கைக்கு உரித்தான கடல் பிராந்தியங்களின் பாதுகாப்பினை நிலையாக வைத்திருப்பதற்காக கடற்படை மற்றும் விமானப்படைக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை விருத்தி செய்தல் என்பன இலக்காக கொள்ளப்படுகின்றது.