ஐ. நா அமைதிகாக்கும் பணிகளின்போது உயிரிழந்த இரு இலங்கை வீரர்களுக்கும் பதவி உயர்வு

ஜனவரி 31, 2019

இம்மாதம் 25 ஆம் திகதி மாலி நாட்டில் ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தவேளையில் உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இலங்கை இராணுவத்தின் 11ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கெப்டன் எச்.டப்ள்யூ.டீ ஜயவவிக்ரம மற்றும் 1ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார ஆகிய இருவரும் முறையே மேஜர் மற்றும் சார்ஜன்ட் ஆகிய தரங்களுக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்கள் இருவருடைய பூதவுடல்களும் எதிர் வரும் இரண்டாம் திகதி (பெப்ரவரி) கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமானநிலயத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரு அமைதிகாக்கும் படை வீரர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (25) ஆம் திகதி மாலி நாட்டில் கீறன பகுதியில் ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் நடாத்தப்பட்ட பாரிய குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.