ஈழத்தை குறிக்கும் பயண வினாடி வினாவை அகற்றுமாறு லண்டன் காடியன் பத்திரிகையிடம் இலங்கை கோரிக்கை

மே 16, 2020
லண்டன் கார்டியன் பத்திரிகையின் வலைப் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள பயண வினாடி வினாக்களில் ஈழம் தொடர்பான வினாக்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அந்த பத்திரிகையிடம் அரசாங்கம் கோரியுள்ளது. 
 
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, இந்த தகவலின் தவறான தன்மை குறித்து கார்டியன் பத்திரிகையாசிரியருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
 
ஐக்கிய இராச்சியத்தில் தி கார்டியன் பத்திரிகையின் வலை பதிப்பில் 2020, மே 15 அன்று வெளியிடப்பட்ட பயண வினாடி வினா : உங்கள் தீவுகள் குறித்து உங்களுக்குத் தெரியுமா, மேன் பிரைடே?" வினா கொத்தில் இரண்டாவது கேள்வியாக கேட்கப்பட்டிருந்த ‘ஈழம் எந்த பிரபலமான விடுமுறை தீவின் பூர்வீக பெயர்?’ என்ற கேள்வி தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, குறித்த கேள்விக்கான பதில்களில், இலங்கை என்ற தெரிவும் விடைகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும், ஒருவர் இலங்கையை விடையாகத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அதை சரியான தெரிவாக காட்டியதாகவும் மேலதிக விளக்கப்பகுதியை கிளிக் செய்யும்போது தீவின் முழு பெயர் அண்மையில் இராணுவ கிளர்ச்சியில் ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான விபரங்கள் தோன்றியதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.