143 நாடுகளில் உள்ள 38,983 இலங்கையர்கள் நாடு திரும்ப உதவி கோரல்

மே 17, 2020

கொரோனா பரவல் அச்சம் காரணமாக 143 நாடுகளிலுள்ள சுமார் 38,983 ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான உதவி கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று (மே,17) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் , மாணவர்கள் மற்றும் குறுகிய கால விசா வைத்திருப்பவர்கள் நாடு திரும்புவர்களின் விபரங்களை சேகரிக்கவும் அவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கவும் 'கண்டக் ஸ்ரீலங்கா' எனும் வலைத்தளத்தை மார்ச் மாதம் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சின் கீழ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஒன்றான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) உதவியுடன் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் படி, 3,078 மாணவர்கள், 4,040 குறுகிய கால விசா வைத்திருப்பவர்கள், 27,854 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், 3527 தங்கி வாழ்வோர் மற்றும் 484 இருநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் ஆகியோர்
தகவல்களைப் பூர்த்திசெய்து நாடு திரும்புவதற்கான உதவியை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 21ம் திகதி முதல் இதுவரை சுமார் 15 நாடுகளிலிருந்து 3600 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.