வடக்கில் ஒன்று கூடல்களை தடுக்க தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுமாறு பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்

மே 18, 2020

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எந்தவொரு ஒன்று கூடல்கள் மற்றும் கூட்டங்கள் கூடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார அறிவுரைகளை புறக்கணித்து சில குழுக்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவுகூற மக்களை ஒன்றுகூட்ட திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே இந்த ஒன்றுகூடல்களை தடுப்பதற்காக அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2167/18 மூலம் திருத்தியமைக்கப்பட்ட 1897ஆம் ஆண்டு 3ம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கிலுள்ள பாதுகாப்பு படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

யாழ் நல்லூர், அரியாலையில் உள்ள பிலடெல்பியா தேவாலயத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சுவிஸ் மத போதகரினால் நடத்தப்பட்ட சமய ஆராதனையில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது பதிவானதையடுத்து,
மாவட்ட எல்லைகளை கடக்கும் மக்களைத் தடுக்கவும், வடக்கில் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கவும் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் வடக்கில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் தற்போது பெருமளவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை தொடர்ந்து பேண தனிமைப்படுத்தல் சட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்புப் படைகளுக்கும் பொலிசாருக்கும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேவேளை, அரசியல்வாதிகளான எம்.கே. சிவஜிலிங்கம், சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் நாடராசா விண்டன் ஆகியோர், மாவட்ட எல்லைகளை கடந்து செல்ல அனுமதிக்கும் அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் சங்குப்பிட்டி வீதித் தடை கடந்துசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

"அத்தியாவசிய சேவைகள் மட்டுமே சங்குப்பிட்டி வீதித் தடையை கடந்துசெல்ல அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அந்த மூன்று அரசியல்வாதிகளிடமும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவதற்கான எந்த ஒரு அனுமதிப்பத்திரமும் காணப்படவில்லை" என பாதுகாப்பு படைக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல். ருவன் வனிகசூரிய தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்ட பின்னர் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மாவட்ட எல்லைகளைக் கடக்க முற்பட்ட மேலும் சிலரும் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக மேஜர் ஜெனரல் வணிகசூரிய தெரிவித்தார்.

முப்பது வருடங்கள் நீடித்த யுத்தத்தின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூற வேண்டுமாயின் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி அவர்களது வீடுகளில் நினைவு கூற முடியுமென அவர் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

"இந்த அமைதியான பிராந்தியத்தில், உயிரிழந்த அவர்களுடைய அன்பான உறவுகளை தங்கள் வீடுகளில் நினைவுகூர முடியும் எனவும், ஆனால் யாரும் ஒன்றுகூடி கூட்டங்களாக நினைவுகூர அனுமதிக்கப்படமாட்டார்கள்," என அவர் மேலும் தெரிவித்தார்.