போராடிப் பெற்ற சமாதானத்தை சீர்குலைக்க எந்த சக்தியையும் அரசு அனுமதிக்காது - பாதுகாப்பு செயலாளர்

மே 19, 2020

எந்தவொரு சக்தியையும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலானஅரசு அனுமதிக்காது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

"நமது போர்வீரர்கள் செய்த மகத்தான தியாகங்களின் மூலம் கடினமாக போராடி பெற்று சமாதானத்தை நமது வருங்கால சந்ததியினரும் அனுபவிக்க வழிவகுக்கும் வகையில் இலங்கையில் நிலையான அமைதி நிலவுவதை எல்லா வகையிலும் நாம் உறுதி செய்வோம்" போர் வீரர்களை நினைவு கூர்ந்து இடம்பெறவுள்ள வெற்றி விழா தினத்தினை முன்னிட்டு இன்று (மே, 19) விடுத்துள்ள செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

மே 19, 2009ம் ஆண்டில் 30 ஆண்டுகால பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது முதல் கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெறும் வரையிலான காலப்பகுதியில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை ஆகியவை பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒரு துளியேனும் இடமளிக்காது நாட்டில் நிலையான சமாதானத்தை பேணி வந்தனர்.

நாட்டிற்கு இந்த மகத்தான வெற்றியை ஈட்டித் தர "எமது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 29,000 க்கும் மேற்பட்ட மனோ வலிமை மிக்க படைவீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர்,
60,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் 14,000 க்கும் மேற்பட்ட போர் வீரர்கள் சக்கர நாற்காலிகளிலும், வாழ்நாள் காயங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்" என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை புலிகளை இல்லாதொழிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் 53 பிரிவுக்கு கட்டளையிட்ட வீரர்களால் செய்யப்பட்ட தியாகங்களை நினைவு கூர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன, வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்ட போர் 2 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் நீடித்தது. இதில் சுமார் 5,900 இராணுவ வீரர்கள் தமது உயிர்களை தாய்நாட்டுக்காக தியாகம் செய்தனர். சுமார் 29,000க்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனமுற்ற கடுமையான காயங்களுடன் வாழ்ந்துவருகின்றனர் என தெரிவித்தார்.

"இராணுவ வீரர்கள் மட்டுமல்ல, கடற்படை வீரர்கள் விமானப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் உயிர்களை இழந்து, கடுமையான காயங்களுக்கு உட்பட்டு வாழ்க்கையை தியாகம் செய்து நாட்டிற்கு சமாதானத்தை கொண்டு வந்தனர். இதற்காக இன்றைய தினம் இடம்பெறும் வெற்றிவிழா தினத்தில் நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களும் அவர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு அமைதியான எதிர்காலத்தை அனுபவிப்பதற்காக போர் வீரர்கள் செய்த தியாகங்களுக்கு நாடு எப்போதும் அவர்களுக்கு கடமைப் பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

"நாங்கள் சமாதானத்தை மிக இலகுவாக பெற்றுக்கொள்ளவில்லை மாறாக மூன்று தசாப்தங்களாக நீடித்த பயங்கரவாதத்தை நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்களையும் அவயவங்களையும் தியாகம் செய்து தோற்கடித்த போர் வீரர்களினாலே பெறப்பட்டது என தெரிவித்தார். இதற்காக போர் வீரர்களின் பெற்றோர்கள், மனைவிமார்கள், அவர்களின் குழந்தைகள், மற்றும் பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட ஆதரவு நாட்டில் பயங்கரவாதத்தை துடைத்தெறிய வழிவகுத்தது என தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராடிய தானுட்பட ஏனைய போர் வீரர்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட
மேஜர் ஜெனரல் குணரத்ன, அடுத்த தலைமுறையினர் அமைதியாக வாழ நாட்டை விடுவிப்பதற்காகவே எமது இளைஞர்கள் தியாகம் செய்ததாக குறிப்பிட்டார்.

'இலங்கையின் வளர்ச்சிக்காக தங்கள் பங்களிப்பை வழங்கும் பொறுப்பான குடிமகனாக நாட்டின் இளைஞர்களை பயிற்றுவிக்கும் தருணம் இதுவாகும்' என அவர் மேலும் தெரிவித்தார்.