ஜனாதிபதியின் தேசிய படைவீரர்கள் தினச் செய்தி
மே 19, 2020பிரிவினைவாத பயங்கரவாதிகளை முற்றாக தோல்வியுறச் செய்து நாட்டுக்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தித் தந்த துணிச்சல் மிக்க படைவீரர்களுக்கு நன்றி நவிலும் படைவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இந்த வாழ்த்துச் செய்தியை பதிகிறேன்.
2009 மே மாதம் 19ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்த போரின் நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்ற முடிந்திருப்பது எமது படைவீரர்களுக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும். பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றி தேசத்தின் சுதந்திரம், ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு பற்றிய எதிர்பார்ப்;புகளின் அடையாளமாகும். அந்த அபிலாஷைகளை அடைந்துகொண்டுள்ள ஒரு சூழலில் இம்முறை படைவீரர்கள் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கிடைத்திருப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த காலத்தில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு மத்தியில் தாய்நாட்டின் மீது பற்றுகொண்ட அனைத்து பிரஜைகளும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்திருந்தனர். உலகின் ஒழுக்கக் கட்டுப்பாடான இராணுவம் என்ற கீர்த்திக்குரிய எமது இராணுவ அதிகாரிகளின் கௌரவத்தைப் பாதிக்கும் பல நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் இடம்பெற்றன. இதனால் மனவேதனையடைந்திருந்த மக்களின் எதிர்பார்ப்பு சட்டமற்ற நிலைக்கு பதிலாக சட்டத்தையும், அநீதிக்கு பதிலாக நீதியையும் உறுதிப்படுத்தி படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளுக்கான உரிய கௌரவத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகும். இந்த எதிர்பார்ப்புகளை எமக்கு நிறைவேற்ற முடியுமாக இருந்தது.
நாம் அடைந்த சுதந்திரத்தையும் சமாதானத்தையும் அர்த்தப்படுத்துவதற்கு ஒரு சுதந்திர தேசம் என்ற வகையில் நாம் ஒன்றுபட்டு எழுந்திருக்க வேண்டும். பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அதேநேரம் தேசத்தின் நன்மையை முதன்மைப்படுத்தி உலகின் ஏனைய நாடுகளுடனும் இணைந்து எமது இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டும். கொவிட் 19 நோய்த்தொற்று போன்ற தடைகள் வந்தாலும் நாம் ஒரு போதும் பின்னோக்கிச் செல்லப்போவதில்லை. தேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச பொறிமுறையினால் தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. நாடு பிளவுபடுவதை தடுத்து நிறுத்திய படைவீரர்களுக்கும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய மக்களுக்கும் வழங்கமுடியுமான உயர்ந்த கௌரவம் அதுவாகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
தாய்நாட்டிற்காக உயிர்நீத்த மற்றும் பல்வேறு தியாகங்களை செய்த படைவீரர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.