வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் பணி தொடரும்
மே 30, 2020- 123 நாடுகளில் வசிக்கும் 42,522 இலங்கையர்கள் நாடு திரும்ப உதவி கோரல்
மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்ற இலங்கையர்களை மீண்டும் தாயகத்துக்கு அழைத்து வரும் பணிகள் தொடரும் என வெளி விவகாரங்கள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் பிறநாடுகளில் தொழிலுக்காக சென்ற நிலையில் சட்டபூர்வமான தொழில் ஆவணங்களற்ற மற்றும் குறித்த நாடுகளில் வேலை வாய்ப்பை இழந்து நிர்கதியான நிலையில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் பணிகள் தொடர உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் குவைத்திலிருந்து திரும்பி வந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தற்போது முன் வைக்கப்பட்டுள்ள கணிசமான அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணிக்குழுவுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் பயணிகளை விமானங்களில் ஏற்றுவதற்கு முன்னர் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மே 27 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக, 123 நாடுகளில் வசிக்கும் 42,522 இலங்கையர்கள் நாடு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களில் 34,881 பேர் வெளிநாட்டில் தொழிலுக்காக சென்றவர்கள் எனவும் அவர்களில் 20,893 பேர் மத்தியகிழக்கில் வசிப்பதாகவும் 4,961 பேர் குறுகிய கால விசா வைத்திருப்பவர்கள் எனவும் 2,016 பேர் மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியுறவு செயலாளர் ரவிநாத ஆரியசின்ஹா, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செயலாளர் கமல் ரத்வத்தே மற்றும் இரு அமைச்சுக்களின் அதிகாரிகள் மத்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்,