பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்கள் சிறைச்சாலைகளிலிருந்து வழிநடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி

ஜூன் 01, 2020
பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகள் போன்ற குற்றங்கள் சிறைச்சாலைகளுக்கு உள்ளிருந்து வழிநடத்தப்படும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
 
நாட்டினுள் இடம்பெறும் பல்வேறு குற்றங்கள் மற்றும் பெருமளவு போதைப்பொருள் கடத்தல்கள் சிறைச்சாலைகளில் இருந்து வழிநடத்தப்படுவதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஜூன்,01) 
நடைபெற்ற சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகளை மீளாய்வு செய்யும் சிறை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த தகவல்களை வெளியிட்டார்.
 
இதன்போது அவர், சிறைச்சாலைகளினுள் கையடக்க தொலைபேசி பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டும்' என குறிப்பிட்டார்.
 
சிறைச்சாலைகள் அல்லது பொலிஸ் துறை வீழ்ச்சியடையுமானால் நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அது தாக்கம் செலுத்தும் எனவும் எத்தகைய அரசியல் கருத்தை கொண்டிருந்த போதும் அதிகாரிகள் சரியானதையே செய்வார்கள் என்றால் அதனை நான் அனுமதிப்பேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் தற்போது நிலவும் குறைபாடுகளை நீக்கி முழுமையாக முறைப்படுத்துவேன் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர், இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஒரு குழுவின் தலைமையில் அது மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
 
அதிகாரிகளைப் பயிற்றுவித்தல், வலுவூட்டுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பு குழுவொன்றிடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதியினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. 
 
ஊழல் மற்றும் வினைத்திறனற்ற அதிகாரிகளை இனம்கண்டு அவர்கள் தொடர்பில் சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். 
 
சிறைச்சாலைத் திணைக்களத்தின் தற்போதைய குறைபாடுகள் நீக்கப்பட்டு, அந்த அமைப்பு முழுவதுமாக சரிசெய்யப்படும் என ஜனாதிபதி ராஜபக்ஷ வலியுறுத்தினார். பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் அடங்கிய குழு மூலம் இந்த மறுசீரமைப்பு செயல்முறை செயல்படுத்தப்படவுள்ளது
 
அதிகாரிகளைப் பயிற்றுவித்தல், வலுவூட்டுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பு குழுவின் மேற்பார்வையுடன் செயல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டது. 
 
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி செயலாளர் பி. பீ. ஜயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நீதியமைச்சின் செயலாளர் எஸ். எம். முஹம்மத், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பொலிஸ் மற்றும் சிறைச்சாலை உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.