வானிலை எச்சரிக்கை
ஜூலை 18, 2019பலத்த காற்று மற்றும் மழை தொடரும் என எதிர்பார்ப்பு
நாட்டில் வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் மேலும் தொடரும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. எதிர்வரும் சனிக்கிழமை (ஜுலை,18) வரை தென்மேற்குப் பகுதியிலும் மத்திய மலைநாட்டிலும் மற்றும் வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டமான வானம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சபராகமுவ மாகாணங்களிலும், களுத்துறை, காலி, கொழும்பு, கம்பஹா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் இரத்னபுரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலுக்கு செல்வோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் கடலில் கடும் காற்று வீசும் எனவும் சில நேரங்களில் காற்றின் வேகம் 70-80 கி.மீ வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.