இலங்கை தனது 71வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறது
பெப்ரவரி 04, 2019இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்று ஆகும்.71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் பிரதான சுதந்திர தின அணிவகுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.
"எகட சிடிமு" (ஒன்றாக இணைந்திருப்போம்) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.
மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த ஆண்டு பிரதான அணிவகுப்பில் 3620 இராணுவம், 1249 கடற்படை, 830 விமானப்படை, 800 பொலிஸ், 505 சிவில் பாதுகாப்பு படை மற்றும் 100 தேசிய மாணவ சிப்பாய்கள் படையணி வீரர்கள் பங்கேற்றனர். சப்ரகமுவ, வவுனியா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கலாச்சார கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இந்நிகழ்வினை மேலும் அலங்கரித்தன. மேலும் பரசூட் வீரர்களின் சாகசங்களும் பலரின் கவனத்தை ஈர்த்தன.
இதனை தொடர்ந்து கடற்படையின் கப்பல்களின் அணிவகுப்பும் இலங்கை விமானப்படையின் விமானங்களின் அணிவகுப்பும் இடம்பெற்றன.
தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர் முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களினால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
தேசிய கொடியை ஏற்றிவைக்கப்பட்ட பின்னர் தாய் நாட்டுக்காக உயிர் நீர்த்த வீரர்களை நினைவு கூர்ந்து இரு நிமிட மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
இங்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள் தனது உரையில், சுதந்திரத்திற்காக தியாகங்கள் செய்த எமது தேசியத் தலைவர்களின் தியாகங்களை நினைவூட்டியதுடன் யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அவர், நாடு எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் தொடர்பாகவும் இங்கு கருத்து வெளியிட்டார்.
இந்நிகழ்வில் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள், ஆளுநர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட அரச மற்றும் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
71வது தேசிய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை...
தேசப்பற்றுடைய எமது தலைவர்கள் நீண்டகாலமாக அந்நிய ஆட்சிக்கு எதிராக முன்னெடுத்த சுதந்திர போராட்டத்தின் பெறுபேறாகவே 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 04ஆம் திகதி எமது தேசத்திற்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்றது.
1815ஆம் ஆண்டு நாம் சுதந்திரத்தை இழந்தவேளையில் வாரியபொல சுமங்கல தேரரினால் ஆங்கிலேயரின் கொடி வீழ்த்தப்பட்டது முதல் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான சுதேச எழுச்சி ஆரம்பமானது. அதன் பின்னர் 1818 மற்றும் 1848ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டங்களின் மூலம், ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் வெளிநாட்டு படையினரை தோல்வியுறச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
பெப்ரவரி 04ஆம் திகதியே எமது நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த தினமாகும். அதற்கும் மேலாக இத்தினம் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்புகளை செய்து உயிர்நீத்த அனைத்து இலங்கையர்களையும் மீண்டும் நினைவுகூரும் தினமாகும். 1905ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரையிலும் அதேபோன்று சுமார் 30 வருடகால கொடூர பயங்கரவாதத்தை தோல்வியுறச்செய்த அனைத்து படைவீரர்களும் அந்த வீரர்களின் வரிசையில் நினைவுகூரப்படுகிறார்கள்.
நாம் முகங்கொடுத்துள்ள சவால்களில் சர்வதேச அழுத்தங்களும் தலையீடுகளும் முக்கியமானவையாகும். அவை 1948ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளை பார்க்கிலும் வேறுபட்ட வடிவங்களில் எம்மை நோக்கி வந்திருக்கின்றன.
இதற்கு மேலும் சுதந்திர கொண்டாட்டம் என்பது, எமது நாடு உலக அரசியல் வரைபடத்தில் சுதந்திர இறைமையை கொண்ட நாடாக எழுந்திருப்பதை அடையாளப்படுத்தும் வகையில் வருடாந்தம் கொண்டாடப்படும் தினமாக மட்டும் இருக்காது. இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்து, பாடுபட்ட, உயிர்நீத்த தேசிய வீரர்களையும் யுத்த களத்தில் உயிர்நீத்த, காணாமல் போன மற்றும் தைரியமாக போராடிய வீரர்களை நினைவுகூருவதற்கும் அவர்களுக்கு தேசத்தின் நன்றியையும் கௌரவத்தையும் வழங்குவதற்கான சந்தர்ப்பமாக நான் இச்சந்தர்ப்பத்தை ஆக்கிக்கொள்கிறேன். பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படைகளில் உயிர்நீத்த இராணுவத்தினரில் தங்கி வாழ்வோருக்கும் அங்கவீனமுற்ற படையினருக்கும் உயிர்வாழும் வரை ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க தேவையான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சில் அண்மையில் இணைந்துகொண்ட பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் அங்கவீனமுற்ற படையினருக்கும் இது அவ்வாறே நடைமுறையாகும்.
சுதந்திரம் என்ற எண்ணக்கரு எல்லைகளை கடந்து விரிந்த அர்த்தம் தரும் ஒன்றாகும். அதாவது நிலத்தின் சுதந்திரம் முதல் மானிட சுதந்திரம், நவீன யுகத்தில் முகநூல் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் வரை விரிந்து காணப்படுகின்றது. 21ஆம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தின் பின்னரை பகுதியில் இருக்கின்ற நாங்கள் நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடும் இதுபோன்றதொரு நாளில் புதிய சிந்தனைகளோடும் விரிந்த மனதுடனும் சுதந்திரம் என்ற சொல்லில் உட்பொதிந்துள்ள விரிந்த பொருளை சரியாக விளங்கிக் கொள்வோம் என அனைத்து பிரஜைகளிடமும் நான் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரம் என்ற எண்ணக்கருவை எந்தவொரு அளவுகோலின் மூலமும் அளவிட முடியாது என்பதுடன், தற்காலத்தில் சுதந்திரம் என்ற எண்ணகருவுடன் இணைந்த எந்தவொரு செயற்பாட்டையும் தெளிவான வரையறை கொண்டு விபரிக்க முடியாத அளவு அது சிக்கலானதாகும்.
இந்த தேசிய மட்டத்திலான பிரச்சினையை அல்லது தேசிய சவாலை ஒவ்வொன்றாக இதுதான் என விபரிப்பதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல. எனினும் நாம் உட்பட எமது நாட்டின் கடந்த காலத்தில் இருந்த அனைத்து தலைவர்களும் ஒன்றாக வகைகூற வேண்டிய 30 வருடகால யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றுபடக்கூடிய முழுமையான அரசியல் தீர்வொன்றிற்கு வர முடியாமல் போனமை கவலைக்குரியதாகும்.
காரணம் எதுவாக இருந்தாலும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யாராக இருந்தாலும் இந்த நாடும் நாட்டு மக்களும் பல தசாப்தங்களாக எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தியை நாட்டுக்கு பெற்றுக்கொடுப்பதில் நாம் அனைவரும் அரசியல் தலைவர்கள் என்ற வகையில் தோல்வியடைந்துள்ளோம். பொருளாதார அபிவிருத்தி எனும் தலைப்பில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டு, தவறுகளை சரி செய்துகொண்டு மந்தகதியிலான பொருளாதார நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவதற்கு இனிமேலும் நாட்டு மக்கள் தயாராக இல்லை. நாட்டில் தலைமை பதவிகளை வகிக்கும் அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தை நன்றாக புரிந்துகொள்ளுதல் வேண்டும். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு ஊன்றுகோலாக இருக்கும் வகையில் பாடசாலை கல்வி, பல்கலைக்கழக கல்வி, தொழில் மற்றும் தொழிநுட்ப கல்வியில் அடிப்படை மறுசீரமைப்புகளையும் மாற்றங்களையும் சர்வதேச தரத்திற்கமைய 21ஆம் நூற்றாண்டுக்கு உகந்தவாறு சரி செய்வது அத்தியாவசியமாக உள்ளது.
21ஆம் நூற்றாண்டின் நவீன பொருளாதார கொள்கையாக அமைந்துள்ள அறிவியல் சார்ந்த பொருளாதாரம், புதிய உற்பத்திகள், பசுமை பொருளாதாரம், கடல்சார்ந்த பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற புதிய பொருளாதார எண்ணக்கருக்களை ஐக்கிய நாடுகளின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுடன் இணைத்து நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகில் பல பொருளாதார நிபுணர்கள் 21ஆம் நூற்றாண்டிற்கு ஆசியாவின் நூற்றாண்டு என மறுபெயர் சூட்டியுள்ளனர். அதற்கமைய ஆசிய வலயத்தின் பொருளாதார அபிவிருத்தி மிக வேகமாக இடம்பெற்று வருவதுடன், இந்த காலகட்டத்தின் சாதகமான நிலையை பயன்படுத்துவதன் ஊடாக எதிர்கால ஆசியாவின் மனிதவள தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களையும் தொழில் வல்லுனர்களையும் வழங்கும் பிரதான நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கு நாம் அனைவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2015ஆம் ஆண்டு பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதனூடாக நாம் நாட்டுக்கு பாரிய சேவையை ஆற்றினோம். ஆனாலும் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை நாம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துள்ளோம். 2015ஆம் ஆண்டு முதல் புதியதோர் அபிவிருத்தியுடன்கூடிய தூய அரசியல் பயணத்தை மேற்கொள்ளவே நான் முயற்சி செய்தேன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் அரசாங்கத்தை மாற்றுவதன் மூலமாக அவர்களது கடமையை ஆற்றியுள்ளனர். ஆனால் ஆட்சியை கைப்பற்றும் அனைத்து அரசாங்கங்களும் மக்களின் எண்ணங்களை சிதைத்துள்ளன. மக்களின் இறையாண்மையின் அதி உன்னத இடமாகக் கருதப்படும் பாராளுமன்றம் இன்று வலு இழந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. பாராளுமன்ற அவையில் காவல்துறை அதிகாரிகளுக்கு மிளகாய் தூளால் தாக்குவதற்கும், மறைத்து வைக்கப்பட்ட கத்திகளை காட்டி அச்சுறுத்துவதற்கும், மக்களின் வரிப் பணத்தால் இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வளங்களை அழிப்பதற்கும் முயலும் நிலை எத்தனை கொடூரமானது. இன்று சமூகத்தின் பண்பற்ற நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே பாராளுமன்றத்தை எண்ணுகின்றனர்.
அரச தலைவர் என்ற பதவி ஒருவருக்கு கிடைப்பது குடிமக்களின் வறுமையை நீக்கி, ஆதரவற்றோர், விதவைகள், நிர்க்கதியானவர்கள், அங்கவீனமுற்றோர், குழந்தைகள், பெண்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைத்து பிரிவு மக்களையும் அழுத்தங்களிலிருந்து காப்பாற்றி சமூக, பொருளாதார மற்றும் சிந்தனை சார்ந்த விடுதலையை பெற்றுக்கொடுப்பதற்கேயாகும்.
பல தசாப்தங்களாக இனமோதலுக்கு தீர்வு காண்பதற்காகவே அனைத்து அரசாங்கங்களும் காலத்தை செலவிட்டன. அதற்கான முக்கியத்துவத்தை வழங்கின, தீர்வுகளை தேடின, அதனால் நாட்டின் பொருளாதார தீர்வுக்கான நடவடிக்கைகள் பின்போடப்பட்டன. அனைவரும் இனமோதலுக்கு முக்கியத்துவமளித்தாலும் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவமளித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு எவரும் முயற்சி செய்யவில்லை. கடன் சுமை, வேலையின்மை ஆகிய இரண்டு பிரச்சினைகளுக்கும் இன்று தீர்வின்றி தவிக்கின்றோம். உலக நாடுகளில் 6,000 மொழிகளுக்கும் மேல் பேசப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எமது நாட்டில் மூன்றே மூன்று மொழிகள் மட்டுமே பேசப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் ஒரே தேசத்தில் வாழும் மனிதர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
வடக்கு மக்கள் முப்பதைந்து ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற சுதந்திரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளே மிகவும் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கேலிப்பொருளாக ஆக்கிவிடாமல் அவற்றின் பாரதூரமான நிலையை நாம் கண்டறிய வேண்டும். செந்தணல் மேல் இருக்கும் சாம்பலில் நாம் நின்றுகொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது.
நாம் மாகாண சபை முறைமையை நிறுவி 30 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. வருடாந்த வரவு செலவு திட்டத்தின் மூலமாக மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியில் அபிவிருத்திக்கும் முதலீட்டுக்கும் 15 சதவீதமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. மீண்டுவரும் செலவு, பராமரிப்புக்கான செலவு 85 வீதமாகும். இந்த நிலையை நாம் மாற்றி அமைக்க வேண்டும். சுமார் ஒன்றரை வருட காலமாக மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயகத்திற்கான சவாலாகவே நான் கருதுகின்றேன். இவை தொடர்பில் பேசுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் இன்று முன்வருவதில்லை.
எமது நாட்டில் 16 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர். புதிய ஆய்வறிக்கை ஒன்றில் அரசாங்க சேவையின் வினைத்திறன் நூற்றுக்கு முப்பது சதவீதமென குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏற்புடையதல்ல. குறைந்தபட்சம் 70 சதவீதமாகவாவது அது இருக்க வேண்டும். அரச உத்தியோகத்தர்களை மாத்திரம் குறைகூற முடியாது. அவர்களுக்கு சரியான வழிகாட்டலும் தலைமைத்துவமும் இல்லாததனாலேயே இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டிருப்பதாக நான் கருதுகின்றேன்.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றிய விடயத்தை நான் ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைப்பது எவ்வளவு தூரம் பண்பாடானவொன்று என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அமைச்சர்களுக்கான வசதிகளை அதிகரிப்பதும் மட்டுமே அதன் நோக்கமாகும் என நான் நினைக்கிறேன். தேசிய அரசாங்கம் என்ற கருத்து ஊடகங்களின் வாயிலாக நான் அறிந்த வகையில் இருக்கும் என்றால் நான் அதற்கு முற்றிலும் எதிரானவன் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
இன்று தனிக்கட்சி அரசாங்கம் ஒன்றின் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 25ஆக வரையறுக்கப்படுமானால் அது மக்களின் பிரார்த்தனை என்றே நான் நம்புகிறேன். நாடு உங்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றி கேள்வி கேட்பதற்கு முன்பு உங்களால் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புக்கள் பற்றிய உறுதிப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றே பெரும்பாலானவர்கள் கேட்கிறார்கள். எனினும் நாட்டுக்காக செய்ய வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகளை செய்வது அவசியமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. 70 வருட காலமாக இலங்கை கடந்து வந்த பயணத்தில் நாம் அடைய வேண்டிய பேண்தகு பெளதீக மற்றும் மானிட அபிவிருத்தியை அடைந்து கொள்ளவில்லை என்பதை இப்போது உணர்கிறோம்.
நாட்டின் முழு வறுமை நூற்றுக்கு 6.7 வீதமாக அறிக்கையிடப்பட்டாலும் நூற்றுக்கு 50க்கும் மேற்பட்ட மக்கள் சார்பளவு வறுமையினால் வாடுகின்றனர். இந்த மக்களின் நாளாந்த வருமானம் 1000க்கும் குறைவானதாகும். சிறுவர்களில் நான்கு பேரில் ஒருவர் மந்த போசணையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீழ்ச்சியடைந்துள்ள எமது ஏற்றுமதி வருமானத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டிய தேவையை நாம் அறிவோம். உலகம் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாம் இன்னும் நாட்டுக்கு தேவையான அறிவை பெற்றுக்கொள்ளும் போராட்டத்தின் ஆரம்பத்திலேயே இருக்கின்றோம். பொருளாதார கொள்ளையர்களினால் இலங்கை தற்போது போதைப்பொருள் கடத்தலின் முக்கிய கேந்திர நிலையமாக மாறியுள்ளது. நாட்டின் அபிவிருத்தியை பாரிய கட்டிடங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், பெரும் எண்ணிக்கையான நுகர்வுப்பொருட்களை விற்பனை செய்யும் சந்தை என்பவற்றைக் கொண்டு அளவிட முடியாது என்றே நான் நினைக்கிறேன். சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட பேண்தகு அபிவிருத்தி எமது வழிகாட்டி கைநூலாக இருக்க வேண்டும். 07 தசாப்தங்களாக நாம் அரசியலாக கருதிக்கொண்ருப்பது இத்தகைய தொலைநோக்குடன் கூடிய ஆட்சியாக அன்றி சுயநலத்துடன் கூடிய தங்களது வயிறுகளை வளர்க்கின்ற அரசியலாகும். எனவே இன்று ஊழலை ஒழிப்பதாக இருக்கட்டும், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும் அவை பெரும் சவாலாக மாறியுள்ளன. என்றாலும் இன்று எமக்கு தேவையாக இருப்பது போலியான மக்கள் சார்புக்கொள்கை அல்ல. மாறாக நேர்மை, தூரநோக்கு கொண்ட அறிவுபூர்வமான தெளிவான ஆட்சியாகும்.
அதேபோன்று கட்டமைக்கப்படும் பொது தொலைநோக்கில் நாம் தேசிய தன்மையை பாதுகாக்கும் அதேவேளை தற்போதைய காலகட்டத்தில் எமக்கு சவால்களாக அமைந்திருக்கும் பூகோளமயமாதல் சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டி உள்ளது. அதேபோன்று 2015ஆம் ஆண்டு முதல் நாம் முற்றும் முழுதாக அச்ச சூழலை அகற்றி உள்ளோம். நாம் அதில் வெற்றி பெற்றோம். ஊழலை முற்று முழுதாக அகற்றுவதற்கு இன்னும் தூரம் பயணிக்க வேண்டும். நேர்மையான அரசியல்வாதிகளின் பற்றாக்குறையை நான் காண்கின்றேன். அதற்கமைய, 71வது தேசிய சுதந்திர தினமான இன்றுமுதல் இலங்கையை ஆசியாவில் அடிமைப்படுத்த முடியாத பலமான, சுபீட்சமான நாடாக மாற்றியமைப்பதற்கு நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும். இலங்கை சமூகத்தை நல்லிணக்கத்துடன்கூடிய தேசத்தினராக மாற்றமடையச் செய்ய வேண்டும். இலங்கையை சிறந்த பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதனூடாக வறுமையை ஒழித்து அனைவரையும் ஒன்றிணைத்த பசுமை பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசியலில் அராஜகத்தை இல்லாதொழிப்பதற்கு பாராளுமன்றத்தை வலுவூட்டும் சமநிலையான வாக்குமுறையை அறிமுகப்படுத்தலும் அரச நிர்வாக நடவடிக்கைகளுக்கு திறமையை அடிப்படையாகக்கொண்டு செயற்படும் முறையை அறிமுகம் செய்வதும் முக்கியமானதாகும்.
நாட்டினுள் ஊழலையும் அராஜகத்தையும் வீண்விரயத்தையும் இல்லாதொழிப்பதற்கு முக்கியத்துவமளிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். போதைப்பொருள் கடத்தல் பாதாள உலகத்தினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட நாட்டை ஆட்டிப்படைக்கும் கருப்புப் பொருளாதாரத்திற்கு உயிரூட்டும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் நாம் தோற்கடிக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தின் உரிமையாளர்களான இளைஞர் சமுதாயத்தை புதிய உற்பத்திகளுக்கு ஊக்குவிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு தொழிநுட்பம் கல்வி, மூலதனம், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும். புத்திஜீவிகள் நிறைந்ததொரு சமுதாயமாக மாற்றுவதற்கு கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். 2016ஆம் ஆண்டு நான் தெரிவித்த கலாசார மாணவன் மற்றும் தொழிநுட்ப மாணவனை பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் நம் அனைவரினதும் கடமையாகும். ஒரு நாளும் பிளவுபடாத ஒரே கொடியின் கீழ் இயங்கும் ஒரே நாடாக நாம் அனைவரும் சமமாக வாழக்கூடிய பின்புலத்தை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். முப்பது வருட கால யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினரையும், அங்கவீனமுற்றோரையும் அவர்களது குடும்பத்தினரையும், அனைத்து இராணுவ வீரர்களையும் நான் மீண்டும் மீண்டும் நினைவுகூருகின்றேன். ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய இரண்டு வீரர்கள் கடந்த வாரம் கடமையில் இருந்தபோது உயிர்நீத்தனர். அவர்களது மறைவுக்காக எனது ஆழ்ந்த வருத்தத்தையும் இந்தவேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
“இந்த தேசமும்
இந்த மொழியும்
இந்த மக்களும்
என் பொறுப்பே”
இதுவே நாம் கட்டியெழுப்ப வேண்டிய எதிர்கால தொலைநோக்கின் சாரமாக இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.
இதேபோன்று இறுதியாக இந்த 71ஆவது சுதந்திர தின விழாவை மிகவும் சிறப்பாக ஏற்பாடுசெய்த உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள், முப்படையினர், பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் இதற்கு அனுசரனை வழங்கிய கல்வியமைச்சு உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேசத்தின் முன்னால் உள்ள சவாலை வெற்றிகொள்ள நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் எனக் கூறி விடைபெறுகிறேன்.
நன்றி.