கொவிட்-19 க்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகளினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு

ஜூன் 09, 2020
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளினால் வழங்கப்பட்ட முழுமையான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவித்ததுள்ளது.
 
சவுதி அரேபியா, குவைத், எகிப்து, பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஈராக் மற்றும் லிபியா ஆகிய மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்களுக்கும் வெளியுறவு உறவுகள், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. 
 
வெளியுறவு அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு நன்றி தெரிவித்தார். 
 
மத்திய கிழக்கில் பணிபுரியும் மற்றும் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளை, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் தொடர்பில் அமைச்சர் குணவர்தன தனது பாராட்டுக்களை தெரிவித்தார். 
 
மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து திரும்பி வருபவர்களுக்காக வகுக்கப்பட்டுள்ள அரசாங்கதின் திட்டங்கள் குறித்தும் அவர் தூதுவர்களுக்குத் தெரிவித்தார்.
 
இந்த சந்திப்பில் சவூதி அரேபிய தூதர் அப்துல்நாசர் எச். அல் ஹர்த்தி, குவைத் தூதுவர் கலப் எம்.எம். பு தஹைர், எகிப்து தூதுவர் ஹுசைன் எல் சஹார்டி மற்றும் பாலஸ்தீனத்தின் தூதுவர் ஜுஹைர் ஹம்தல்லா ஸைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர் ஹுமைத் அல் தமிமி, கட்டார் தூதுவர் ஹமாத் அல் புய்னைன், ஈராக் தூதுவர் குதய்பா அகமது அல்கெரோ மற்றும் லிபியா அமைச்சர் அமர் ஏ.எம். முப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
அரசாங்கங்களுக்கிடையிலான பொறிமுறையின் மூலம் பிராந்தியத்துடன் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
 
இந்த கலந்துரையாடலில் வெளியுறவுச் செயலாளர் ரவிநாத ஆரியசின்ஹா ​​மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.