ஐ. நா. அமைதி காக்கும் படையின் உயிரிழந்த இலங்கை வீரர்களின் உடல்கள் நாட்டிற்கு கொண்டுவருகை
பெப்ரவரி 05, 2019ஐ. நா. அமைதி காப்பு பணிகளின்போது உயிரிழந்த இலங்கை வீரர்களின் உடல்கள் நேற்றையதினம் (பெப்ரவரி,04) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த மேஜர் எச்.டபிள்யூ.டீ.ஜெயவிக்கிரம மற்றும் சார்ஜன் எஸ்.எஸ். விஜேகுமார ஆகிய வீரர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் இலங்கை இராணுவத்தினரால் கையேற்கப்பட்டன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அடங்கிய பேழைகளை கையேற்கும் நிகழ்வின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.
உயிரிழந்த இலங்கை வீரர்களின் பேழைகளை மூடிய ஐக்கிய நாடுகள் சபைக் கொடியானது மாலி பிராந்தியத்தில் ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் டென்னிஸ் ஜில்லிஸ்போரே மற்றும் ஏனைய ஐ.நா. பிரதிநிதிகள் ஆகியோரினால் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களிடம் கையளிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து பேழைகளில் தேசிய கொடி போர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் ஐக்கிய நாடுகள் சபைக் கொடி மாலி பிராந்தியத்தில் ஐ. நா. அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும் படைகளின் கட்டளைத் தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
உயிரிழந்த இலங்கை வீரர்களின் இறுதிக்கிரிகைகள் அவர்களின் சொந்த ஊர்களான பொலன்னறுவை மற்றும் பொல்பிதிகம ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளன.
மேலும் உயிரிழந்த இலங்கை வீரர்களின் உடல்களை கையேற்கும் நிகழ்வில் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், திருமதி ஹனா சிங்கர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலி நாட்டில் கீறன பிராந்தியத்தில் அமைதி காப்பு பணிகளை மேற்கொள்ளும்போது இடம்பெற்ற குண்டு தாக்குதலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கெப்டன் எச்.டபிள்யூ.டீ. ஜயவிக்ரம மற்றும் கோப்ரல் எஸ்.எஸ். விஜயகுமார ஆகிய இரு வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த அவர்கள் அடுத்த தரநிலைக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.