ஜனாதிபதி அலுவலகத்திற்கு ‘ஒம்புட்ஸ்மன்’ குறைகேள் அதிகாரியொருவர் நியமிப்பு
ஜூன் 12, 2020ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு எஸ்.எம். விக்ரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்திற்கு ஒம்புட்ஸ்மன் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை அமைதியாக பேணுவதற்கு தடையாகவுள்ள பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல், சூழலுக்கு பாதிப்பான விடயங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் முறைப்பாடுகளை இப்புதிய காரியாலயத்தில் மேற்கொள்ள முடியும்.
நிர்வாக அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அரச அதிகாரிகள் பொறுப்பிலிருந்து விலகியிருந்தால் அல்லது அதனை தாண்டி செயற்பட்டிருந்தால் அதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் அல்லது அழுத்தங்கள் ஏற்பட்டிருக்குமானால் அது பற்றி கண்டறிந்து தீர்வுகளை வழங்குவது ஒம்புட்ஸ்மன் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும்.
கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தையில் உள்ள பழைய சார்ட்டட் வங்கிக் கட்டிடத்தின் 03வது மாடியில் இவ்வலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
011-2338073 என்ற தொலைபேசி/தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது ombudsman@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்க முடியும்.