தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை 22ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்.
ஜூன் 15, 2020- முதற்கட்டமாக நாளொன்றுக்கு 300 அடையாள அட்டைகள் விநியோகிக்க நடவடிக்கை
கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவையை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் மீளஆரம்பிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
திணைக்களத்திற்குள் ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக நாளொன்றுக்கு 300 தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பீ. வி குணதிலக்க பாதுகாப்பு அமைச்சு இணைய தளத்திற்கு தெரிவித்தார்.
கொரானா தொற்றை தவிர்க்கும் வகையான சுகாதார அறிவுறுத்தல்களை கருத்திற் கொண்டு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்தின் ஊடாக 250 அடையாள அட்டைகளையும் காலியிலுள்ள தென் மாகாண காரியத்தின் ஊடாக 50 அடையாள அட்டைகளுமே விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வழமையாக விநியோகிக்கப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன் சுமார் மூன்று மாத கால இடைவெளிக்கு பின்னர் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட் கிழமை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த புதிய நடைமுறைக்கு அமைய ஒரு நாள் சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள விரும்புவோர் தனது விண்ணப்ப பத்திரத்தை கிராம சேவையாளர் ஊடாக உறுதி செய்து தத்தமது பிரதேச செயலாளர் காரியாலளத்திலுள்ள அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் கிளையில் கையளிக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பத்தை கையளிக்கும் போதே விண்ணப்பதாரி பத்து வேலை நாட்களுக்குள் தான் அடையாள அட்டைகளை பெறறுக் கொள்ள வசதியான திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்து இலக்கத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். குறித்த தினத்தில் வருகை தரமுடியாமல் போகும் பட்சத்தில் அது தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு அறிவித்து பிரிதொரு திகதியையும் நேரத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, காய்ச்சல், தடிமல், சலி மற்றும் தலைவலி போன்ற நோய் தொடர்பான அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் குறித்த விண்ணப்பதாரி தனக்குறிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வருவதை தவிர்க்குமாறும், வருகை தரும் அனைவரும் முகக்கவசம் அணிவதும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதும் காட்டயம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.