சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கும் அதன் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கும் எதிராக மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேயினால் சட்டநடவடிக்கை

ஜூன் 15, 2020

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திற்கும் அதன்  பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிற்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  பொருட்டு அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் துவான்  சலே கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே, தனது  சட்டத்தரணி  பசன் வீரசிங்க ஊடாக குறித்த விடயம் தொடர்பாக யஸ்மின் சூக்காவிற்கும் அவரது அமைப்பிற்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில்,  2020 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி, மேஜர் ஜெனரல் சலேவுக்கு எதிராக பல்வேறு அவதூறான கருத்துக்கள் அடங்கிய  ஊடக அறிக்கை ஒன்றினை  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர்  யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ளதாகவும் குறித்த ஊடக அறிக்கை அந்த அமைப்பின் இலங்கை இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேஜர் ஜெனரல் சலேயின் குணாதிசயங்கள் மற்றும் அவரது திறமையான செயற்பாடுகளிற்காகவே அவருக்கு பல்வேறு விருதுகள் கிடைக்கப்பெற்றன.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இலங்கை குறித்த இணையத்தளம் மூலம் யஸ்மின் சூக்காவினால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினால், புலனாய்வு அதிகாரியின் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சலே இதற்காக தனக்கு ஒரு பில்லியன் ரூபா மான நஷ்டஈடு செலுத்துமாறு கோரியுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் திருமதி. சூக்காவும், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும்  இவ்வாறான அவதூறான கருத்துக்களை வெளியிடுவதைத் தடுத்து நிறுத்து வேண்டும் எனவும் அவர்கள் இந்த கோரிக்கைகளை கடைபிடிக்கத் தவறினால், அவர்களுக்கு எதிராக சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை  ஏற்படும்  எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.