கொரோனா வரைஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் புகழிடக் கோரிக்கையாளர்களைத் தடுக்கும் வகையில் கடற்படை விழிப்புடன்

ஜூன் 16, 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை  பல்வேறு கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், கொரோனா வரைஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து புகழிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக கடற்படை பேச்சாளர் லெப்டினென்ட் கொமாண்டர், இசுரு சூரிய பண்டார  இன்று (16) தெரிவித்தார்.  

இவ்வாறு நாட்டுக்குள் சட்டவிரோதமாக வருவோரை தடுப்பதற்காக இலங்கை கடற்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   

"சகல துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஊடாக பயணிகளின் வருகையை நிறுத்த அரசு தீர்மானித்திருந்த வேளையில், வெளிநாட்டிலிருந்து இதுபோன்ற சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுப்பதற்காக கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாம் கடுமையாக்கியுள்ளோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஊடுருவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதால், கடல்வழியான பயணிகள் உள்வரும் மற்றும் வெளியேறும் சகல வழிகளும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் அவை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.  

நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற் பிராந்தியங்களில் அதிக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன், மீனவர் போர்வையில் கடத்தல் மோசடிகளில் ஈடுபடுவோர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் சாத்தியங்கள் காணப்படுவதால் அவற்றை தடுக்கும் வகையிலும் கடற்படையினர் தமது கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.  

போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருப்பதுடன், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய நாட்டை சூழ உள்ள கடற்பிராந்தியங்கள் மாத்திரமின்றி சர்வதேச கடல் எல்லைகளிலும் கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

சட்டவிரோதமாக முறையில் நாட்டுக்குள் வருவோரை தடுக்கும் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளுக்கு தமது சக படைப்பிரிவுகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பரஸ்பர ஒத்துளைப்புக்கள் தொடர்பாக தெரிவிக்கையில், இலங்கை இராணுவம், விமானப்படை, பொலிஸார், கடலோர காவற்படை ஆகியோர் தமது பூரண ஒத்துழைப்பை நல்கியதாக அவர் தெரிவித்தார்.     

விசேடமாக கடற்படையின் கடல் கண்காணிப்பு நடவடிக்கையின்போது இலங்கை விமானப்படையின் உளவு விமானங்களை ஈடுபடுத்துவதன் மூலம் தமக்கு ஒத்துளைப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை விமானப்படையின் உளவு விமானங்கள் நாட்டுக்குள் வரும் சட்டவிரோத நபர்கள் தடுப்பதேதவிர  எந்த ஒரு நாட்டையும் குறிவைத்து செயற்படவில்லை எனவும் இராணுவ பேச்சாளர் சூரிய பண்டாடர தெரிவித்தார்.