சேவையில் இருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளை மீண்டும் சேவைக்கமர்த்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்
ஜூன் 18, 2020சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப் படை வீரர்கள் உள்ளடங்கலான பொலிஸ் அதிகாரிகளை நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்காக மூவர் அடங்கிய குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு 2020 பெப்ரவரி மாதம் 19ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதற்கமைய 2009 ஜூன் 1ம் திகதிக்கு முன்னரும் பின்னரும் சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்களில் 2020 ஜனவரி 1ம் திகதியாகும் போது 50 வயதுக்குட்பட்டவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையானது முறையாக மற்றும் திறந்த செயற்றிட்டத்தின் மூலம் மூவர் அடங்கிய குழுவின் பரிந்துரைக்கேற்ப தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படவுள்ளது.
சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து அமைச்சு பெறும் முறையீடுகளை கருத்தில் கொண்டு அவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் வழிவகைகள் குறித்து ஆராயுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
இந்தக் குழுவானது, 2009 ஜூன் 01க்கு முன்னரும் பின்னரும் சேவையில் இருந்து விலகிய அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட முறையீடுகள் குறித்து ஆராயவுள்ளது.
2009 ஜூன் முதலாம் திகதிக்குப் பின்னர் சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் சேவையில் இணைக்கப்படும் போது அவர்கள், பொலிஸ் மா அதிபரால் குறிப்பிடப்படும் பிரதேசத்தில் குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அமைய பணியாற்ற வேண்டும்.
இக்கால எல்லைக்குள் அவர்கள், இடமாற்றம் பெற்றுச் செல்ல எதிர்பார்ப்பதாயின் இது தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவில் முறையீடு செய்தல் அவசியமாகும்.
சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விலகியதற்கான பின்னணி குறித்து ஆராயப்பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட, உடல் மற்றும் உளரீதியாக தகுதியுள்ளவர்கள் என பொலிஸ் வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.
2009 ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிய நிலையில் மீண்டும் சேவையில் இணைய முறையீடு மேற்கொள்ளும் அதிகாரிகள், சேவை காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் (நடவடிக்கை வலயம்) ஒரு வருடம் பணியாற்றி இருத்தல் வேண்டும்.
சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது முறையீடுகளை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.defence.lk இல் அல்லது இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இல் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் அளிக்க முடியும். மேலும் இதுதொடர்பான மேலதிக விபரங்களை 0112887884 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை அனுப்பும் போது கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் "மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளல் 2020" என குறிப்பிடல் அவசியமாகும்.
மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பரிசீலனை செய்வதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தை 2020 ஜூலை, 17ம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பி வைத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டிய முகவரி :
மேலதிக செயலாளர்,
பாதுகாப்பு அமைச்சு,
(சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு)
14ம் மாடி,
சுஹுருபாய,
பத்தரமுல்ல.
மின்னஞ்சல் முகவரி : adlseclaw1@defence.lk
விண்ணப்படிவங்களை பதிவிறக்கம் செய்ய